கும்பகோணம் மாநகராட்சியில் வார்டுகள் விரிவாக்கம் கருத்துக்கேட்பு கூட்டம்

கும்பகோணம் மாநகராட்சியில் வார்டுகள் விரிவாக்கம் கருத்துக்கேட்பு கூட்டம்
X

கும்பகோணம் மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டம்.

கும்பகோணம் மாநகராட்சியில் வார்டுகள் விரிவாக்கம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சி வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார். இதில் நகராட்சி நிர்வாக இயக்குநரும் மறுவரையறை ஆணைய உறுப்பினருமான பொன்னையா, செயலாளர் சுந்தரவல்லி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து மறுவரையறை பற்றிய கருத்துக்கள், ஆட்சேபனைகள், கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டது.

இதில் திமுக சார்பில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் தமிழழகன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜா.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கும்பகோணம் நகராட்சியில் 45 வார்டுகள் இருந்தது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால் 48 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

மாநகராட்சிக்குரிய எல்லை வரையறை செய்வதில் உள்ள குளறுபடிகள், வாக்காளர் பட்டியல் தொடர்பான குளறுபடிகள் போன்றவற்றில் முறையாக தீர்வு கண்டு, பின்னர் தரம் உயர்த்தியிருக்க வேண்டும் என அனைத்து கட்சி தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய பழனிகுமார் "தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீதான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, உரிய ஆய்வு நடத்தி தேவையான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!