கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்
கும்பகோணம் காந்தி பூங்காவில் திருக்குறளை விநியோகித்த இந்து மக்கள் கட்சி- அனுமன் சேனா நிர்வாகிகள்
கும்பகோணம் காந்தி பூங்காவில் அனுமன் சேனா மற்றும் சிவசேனா கட்சியினர் இணைந்து திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகப் பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை கிருஸ்தவராக அடையாளப்படுத்த முயற்சிக்கும் பாதிரியார் தெய்வநாயகத்தின் செயலை கண்டித்தும், அவர் எழுதிய புத்தகத்தை தடைசெய்ய கூறியும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் இதில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதரன், திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரீதரன் கூறுகையில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரை ஒரு சமயத்திற்குள் அடைத்திட சதி நடந்து கொண்டிருக்கிறது. கள் உண்ணாமை தெய்வத்தை தொழுவது எப்படி என்ற ஒழுக்க நெறி காட்டுதலை திருவள்ளுவர் 1330 குறள்களில் கொடுத்திருக்கிறார். ஆகவே திருவள்ளுவரை ஒரு சச்சரவுக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதன் அடிப்படையிலே திருக்குறள் பகவத் கீதையை விட ராமாயணத்தை விட மகாபாரதத்தை விட உயர்ந்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
அதுபோல பிற சமயத்தை சார்ந்தவர்கள் தாங்கள் வணங்குகின்ற அந்த வேத நூல்களை விட திருக்குறள் மிகப்பெரிதானது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்களா என்பதை மக்கள் மத்தியில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். திருக்குறள் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் குடந்தை பாலா மற்றும் சிவசேனா தலைவர் வேல்முருகன் இணைந்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரின் வீட்டில் திருக்குறள் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக முதல்வர் பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu