டெல்டா மாவட்டங்களில் வெறிச்சோடி காணப்பட்ட பூ மார்க்கெட்டுகள்

டெல்டா மாவட்டங்களில் வெறிச்சோடி காணப்பட்ட பூ மார்க்கெட்டுகள்
X

ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய பூ மார்க்கெட்.

டெல்டா மாவட்டங்களில் ஊரடங்கு காரணமாக பூ மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 600 கடைகள் உள்ளன.

இந்த மார்க்கெட்டுகளுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

இங்கிருந்து வேளாங்கண்ணி, வேதாரண்யம், மன்னார்குடி, வலங்கைமான், ஆலங்குடி, சூரியனார் கோயில், கஞ்சனூர், திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, திருவெண்காடு, பூம்புகார், அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்டிகை காலங்களிலும், முகூர்த்த தினத்தன்றும் பூக்கள் விலை அதிகமாக இருக்கும். ஆனால் வழிபாட்டு தலங்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பூக்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பூக்களை வாங்குவதற்கும் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. குறைந்த அளவிலான பூக்களையே வாங்கினர். சில விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.

பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. பூக்களின் விலையும் குறைந்து இருந்தது. நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையான மல்லிகைப்பூ, முல்லைப்பூ நேற்று ரூ.1,500-க்கு விற்பனையானது. ரூ.1,200-க்கு விற்ற ஜாதிமுல்லை ரூ.700-க்கும், ரூ.200-க்கு விற்ற அரளி ரூ.100-க்கும், ரூ.1,000-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.500-க்கும், ரூ.100-க்கு விற்ற செவ்வந்தி ரூ.60-க்கும், ரூ.150-க்கு விற்ற சம்பங்கி ரூ.80-க்கும் விற்பனையானது.

Tags

Next Story