புதிய மாவட்டமாக கும்பகோணத்தை அறிவிக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

புதிய மாவட்டமாக கும்பகோணத்தை அறிவிக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
X
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வரும் 18ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வரும் 18ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஒருங்கிணைப்பு குழு தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்திய முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைத்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி சென்னை விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற உள்ள போராட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற கூட்டத்தொடரில் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று கூறினார். ஆனால், இதுவரை கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பிரசாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். தேர்தலில் வென்று, தற்போது முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் இதுவரை அறிவிக்கவில்லை. எனவே, கும்பகோணத்தை புதிய மாவட்டமாக கோரி 25 ஆண்டுகளுக்கு மேல் போராடி வரும் இந்த பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னை விருந்தினர் மாளிகை முன்பு இந்த மாதம் 18ம் தேதி(புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில், கும்பகோணத்தில் இருந்து அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் சங்கர், பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன், தமிழ்மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் அசோக்குமார், இந்துமக்கள் கட்சி குருமூர்த்தி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தளபதி சுரேஷ்,குடந்தை வர்த்தக சங்க தலைவர் சேகர் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!