விநாயகர் சதுர்த்தி விழா: தடையை நீக்கக்கோரி தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா தடையை நீக்க கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் உச்சிப்பிள்ளையார் கோவில் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வருகிற 10-ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய தடை விதித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விஸ்வரூப விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பாக கொண்டாட எண்ணியிருந்த பல்வேறு இந்து அமைப்பினருக்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் பா.ஜனதா, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார் . இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யவும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், சிவசேனா மாவட்ட பொது செயலாளர் குட்டி சிவகுமார், அகில பாரத இந்து ஆன்மிக பேரவை இளைஞர் அணி பொதுச் செயலாளர் கண்ணன், அகில பாரத இந்து மகா சபா தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரகாஷ், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் செந்தில் முருகன் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, உச்சி பிள்ளையார் கோவில் விநாயகர் 108 தேங்காய் உடைத்து கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu