கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் பால்பண்ணை ஊழியர்களும் புகார்

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் பால்பண்ணை ஊழியர்களும் புகார்
X

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான பால்பண்ணையில் பணியாற்றும் ஊழியர்கள், தீவனங்கள் விநியோகம் செய்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் பால்பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 8 மாதமாக ஊதியம் தரவில்லை என புகார்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். இவர் பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக இருந்தார். இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக தொகை வழங்கப்படும் என கூறியதால் கும்பகோணத்தில் ஏராளமானோர் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஆனால் யாருக்கும் முதிர்வு தொகை கொடுக்கவில்லை.

இந்நிலையில் துபாயை சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ்பானு தம்பதியினர் தங்களுக்கு முதலீடு செய்த ரூ.15 கோடி தராமல் ஏமாற்றியதாக காவல் துறையில் புகார் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறவான எம்.ஆர்.கணேஷ் சகோதர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் இவர்களுக்கு சொந்தமான கொற்கை மற்றும் மருதாநல்லூரில் 3 பால் பண்ணை உள்ளது. இதில் ஜெர்சி, சிந்து போன்ற உயர்ரக பசுமாடுகள் என 384 மாடுகளும், 50 கன்றுகளும் உள்ளது. இந்த பால்பண்ணையில் 20 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என கூறி நேற்று இரவு பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், மூன்று பால்பண்ணைகளிலும் 384 மாடுகளும், 50 கன்றுகளும், ஆடு, கோழி, வாத்துகள் என ஏராளமாக உள்ளது. தற்போது 40 வைக்கோல் கட்டுகளும், 5 மூட்டை தீவனங்கள் மட்டுமே உள்ளது. இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே இந்த தீவனங்கள் உள்ளது. ஒரு நாளைக்கு பராமரிப்பு செலவாக மட்டும் ரூ.40 ஆயிரம் ஆகிறது. நூறு மாடுகளிலிருந்து 350 லிட்டர் பால் கறவை செய்யப்படுகிறது. எங்களுக்கு 8 மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை, அதை பெற்றுத் தர வேண்டும் என புகார் அளித்துள்ளோம் என்றனர்.

அதே போல், பால்பண்ணைக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனப்புல் விநியோகம் செய்தவர்கள் உள்பட 10 பேர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்கள் அனைத்தையும் போலீஸார், நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரிக்கும் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதற்கிடையில் மருதாநல்லூரில் உள்ள பால்பண்ணைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Tags

Next Story
ai marketing future