கும்பகோணம் கால்நடை மருத்துவமனையில் குவிந்த மக்களால் பரபரப்பு
தவறான அறிவிப்பால் கும்பகோணம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
கும்பகோணம் கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கத்தில் அங்கத்தினர்களாக சுமார் 25,000 பேர் உள்ளனர். இவற்றில் 1700 பேர் மட்டுமே பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல பாரத பிரதமரின் கிஷான் அட்டை மாடு வளர்ப்பவர்களும் பெறலாம் என்றும் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அங்கத்தினர்களுக்கு மாடுகளை பெற கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த விண்ணப்பங்களை கும்பகோணம் கால்நடை மருத்துவ அலுவலரிடம் வழங்கலாம் எனவும் அங்கத்தினர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் மாட்டிற்கு கடன் கொடுக்கிறார்கள் என்ற செய்தியால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தினர்களும் அங்கத்தினர்கள் இல்லாதவர்களும் அங்கு கூடினார்கள். சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களுக்கு கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் விண்ணப்பங்களை விநியோகம் செய்திருந்தால் இது போன்ற குழப்பங்களை தவிர்த்திருக்கலாம். மேலும் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளை சேர்ந்த பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் ஒரே இடத்தில் கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் கூடியதால் கால்நடை மருத்துவமனை அலுவலர்களும் செய்வது அறியாது திகைத்தனர். அதிகாரிகளின் இது போன்ற திட்டமிடப்படாத செயல்களாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமலும் பொதுமக்கள் சிரமப்படுவதை அரசு தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu