கும்பகோணம்: ஹெலிகாப்டர் சகோதரர்களின் பால் பண்ணையில் இருந்த பசுக்கள் பறிமுதல்
கும்பகோணத்தில் இருந்து விழுப்புரம் கோசோலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பசுக்கள்
ஹெலிகாப்டர் சகோதரர்களின் பால் பண்ணைக்கு சொந்தமான 154 பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, பராமரிப்புக்காக விழுப்புரம் காஞ்சி காமகோடி மகா பெரியவர் கோசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்ஆர்.கணேஷ் மற்றும் எம்ஆர்.சாமிநாதன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது புதுக்கோட்டை சிறையில் உள்ளனர்.
மேலும், கணேசன் மனைவி அகிலா, மேலாளர் வெங்கடேசன், கணக்காளர் ஸ்ரீகாந்த் மீரா, ஸ்ரீதர் ஆகிய 7 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு சொந்தமான 11 சொகுசு கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், சகோதரர்கள் நடத்திவந்த பால் பண்ணையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் எழுந்தது.
அங்குள்ள பசுக்கள் மற்றும் கன்று குட்டிகளுக்கு முறையாக தீவனம், தண்ணீர் வழங்கி பராமரிப்பதற்கு ஆட்கள் இல்லாததால், அவைகள் உணவின்றி தவிப்பதாக விலங்குகள் நல அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சப் கலெக்டர் இன்று பால் பண்ணையில் இருந்த 154 பசுக்கள் மற்றும் கன்றுக் குட்டிகளை பராமரிப்பதற்காக விழுப்புரத்தில் உள்ள காஞ்சி காமகோடி மகாபெரியவர் கோசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார். பின்னர் அனைத்து மாடுகளும் லாரிகளில் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu