கைத்தறி நெசவாளர்களுக்கு கோரப்பட்டு விலையை குறைக்க வலியுறுத்தி சிஐடியு கடிதம்

கைத்தறி நெசவாளர்களுக்கு கோரப்பட்டு விலையை குறைக்க வலியுறுத்தி  சிஐடியு கடிதம்
X
பட்டுக்கு தேவையான மல்பெரி செடிகள் உற்பத்தி அதிகரித்து தமிழகத்தில் பட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும்

சிஐடியு சார்பில் கைத்தறி நெசவாளர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் நாகேந்திரன், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முதல்வருக்கு எழுதியுள்ள கடித விபரம் வருமாறு:

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தொழிலாக இருந்தது கைத்தறி நெசவுத்தொழில் இன்று மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. கைத்தறி பட்டு புடவை, வேஷ்டி, துண்டு, ஜமக்காளம், சேலை என பல்வேறு ஜவுளி ரகங்கள் நெய்யப்பட்டு வந்தது. தமிழகத்தில் சுமார் 4 லட்சம் தறிகள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கைத்தறிக்கென 22 ரகங்கள் ஒதுக்கப்பட்டு இந்த ரகங்கள் வேறு வழிகளில் பயன்படுத்த கூடாது என சட்டம் இருந்தது.

தற்சமயம் 22 ரகத்தில் 11 ரகங்கள் விசைத்தறிகளிலும், மில் தறிகளிலும் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டு 11 ரகங்கள் மட்டுமே கைத்தறிகளிலில் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் கைத்தறி தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் குடிசைத்தொழில் என அங்கீகரிக்கப்பட்டு வரி விதிப்பு எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. 2017-க்கு பின் ஜிஎஸ்டி வரி (சரக்கு மற்றும் சேவை வரி) கைத்தறியில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஐந்து இடங்களில் வரி விதிக்கப்படுகிறது. அதாவது மூலப் பொருள் கொள்முதல், விற்பனை, சாய பவுடர், தறி உபகரணங்கள், ஜரிகை நெய்யப்பட்ட துணியின் விற்பனை என ஐந்து இடங்கள் விதிக்கப்படுகிறது.

மேற்படி ஜிஎஸ்டி வரியினால் உற்பத்தி செய்யப்படும் துணிகள் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. தற்சமயம் 5 சதவீதம் உள்ள ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அரசு அறிவிப்புகள் வந்துள்ளது. மேலும் கச்சா பட்டு விலை கிடுகிடுவென உயர்ந்து உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு கட்டுப்படி ஆகாத நிலையில் விலை உயர்ந்துள்ளது. இதனால் சிறு உற்பத்தியாளர்கள் முதல் பெரிய உற்பத்தியாளர்கள் வரை துணி உற்பத்தி நிறுத்தும் நிலை ஏற்படும். மேலும் நெசவாளர்கள் தொழிலின்றி பாதிக்கப்படுவார்கள். வாழ்நிலை கேள்விக்குறியாகும்.

தமிழகத்தில் தற்போதைய தேவை 60 சதவீத கர்நாடக மாநிலத்தில் இருந்தும், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே உடனடியாக தற்போதைய கோரா பட்டு ஜரிகை விலை ஏற்றத்தை குறைத்திட பட்டு இறக்குமதி செய்து பதுக்கலுக்கு வழிவிடாமல் நேரிடையாக உற்பத்தியாளர்களுக்கும், நெசவாளர்களுக்கு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

பட்டுக்கு தேவையான மல்பெரி செடிகள் உற்பத்தி அதிகரித்து தமிழகத்தில் பட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும். தொழிலை உடனடியாக பாதுகாத்திட விலை ஏற்றத்துடன் உற்பத்தியாகும் கோரப்பட்டுக்கு மானியம் வழங்கி விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு உற்பத்தியாளர்களுக்கும், நெசவாளர்களும் கிடைத்திட செய்ய வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிகளை நிறுத்தி காதி நெசவுக்கு வழங்கியது போல், கைத்தறி பட்டு முற்றிலுமாக வரிவிலக்கு அளிக்க வேண்டும். இந்தக்கோரிக்கைகளை நிறைவேற்றி பட்டு கைத்தறி தொழிலையும் கைத்தறி நெசவாளர்களையும் பாதுகாத்திட வேண்டுகிறோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!