மறக்க முடியுமா -2004 ஜுலை 16 ம் தேதி கும்ப கோணத்தில் நடந்த தீ விபத்து
இன்று வரை ஒரு சம்பவத்தை நினைத்தாலே மனதும் - உடலும் நடுங்கி விடும்.🔥 அது - 2004 ஜுலை 16 ம் தேதி கும்ப கோணத்தில் நடந்த தீ விபத்து நிகழ்வுதான்.
கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் போனாலும் மறக்க இயலாத அந்நிகழ்வு. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மழலை மாறாத 94 பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.
தமிழக மக்கள் மட்டுமல்ல, உலகமே கண்ணீர் சிந்திய நாள்.கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் பாடம் படித்து கொண்டிருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி துடிதுடிக்க பலியானார்கள்.
குழந்தைககளுக்கு சேர்ந்த கொடூரம், பெற்றோர்களுக்கு மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.ஒரே கட்டிடத்தில் ஸ்ரீகிருஷ்ணா மழலையர் பள்ளி, சரசுவதி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வந்துள்ளது. இதில் சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவ-மாணவிகள் செல்வதற்கு ஒரே ஒரு படிக்கட்டு வழி மட்டுமே இருந்துள்ளது. இதனால் தீவிபத்து ஏற்பட்டவுடன் படிக்கட்டு வழியாக அனைத்து குழந்தைகளும் இறங்க முயற்சித்துள்ளனர்.
அதற்குள் குறுகிய வழி என்பதால் தீ வேகமாக பரவியதில் 94 பிஞ்சு குழந்தைகளும் கருகி இறந்தன. 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தன. இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகுதான் தமிழக அரசின் பள்ளி கல்வி துறை விழித்து கொண்டது. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளி கட்டிடத்துக்கும் போதிய உள் கட்டமைப்பு வசதி, காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு கும்பகோணம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ந்தேதியை துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர்.😤
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்த இடத்தை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அத்வானி, மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகம் சார்பில் விஜயகாந்த், சரத்குமார், லதா ரஜினிகாந்த் என்று ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
தற்போது தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக்கூடமே நினைவு சின்னமாக மாறிவிட்டது. ஆண்டுகள் பல் ஆனாலும் மனதில் நீங்காத சோக சுவடுகளாக இருந்து வருகிறது. இன்று ஜூலை 16-ந்தேதி என்பதால் இன்று நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணா பள்ளி கட்டிடத்தின் முன்பு, தீ விபத்தில பலியான 94 குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் குழந்தைகளை பறிகொடுத்த குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பொதுமக்கள், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். ஆண்டுகள் ஆனாலும் குழந்தைகளின் பெற்றோர் இன்று வரை இந்த கொடூர சம்பவத்தை நினைத்து நெஞ்சிலும், வயிற்றிலும் அடித்து கொள்வது காண்போரின் கண்களை குளமாக்குகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu