திமுக கூட்டணிகள் நீட் தேர்வை இதற்காகவே எதிர்க்கின்றன: அண்ணாமலை பேச்சு
கும்பகோணத்தில் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக நகர்ப்புறங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. கும்பகோணத்தை பொருத்தவரை ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படும் பெரிய நகரங்களுக்கு அடுத்த கட்டமாக உள்ள அம்ருத் சிட்டி என்ற தகுதி வாய்ந்த நகரமாக உள்ளது.
நாங்கள் வெற்றி பெற்றவுடன் கும்பகோணம் நகரை, அம்ருத் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசின் மிகப்பெரிய நிதியை பெற்று, இந்நகரை சிறப்பான நகராக மாற்றுவோம். மத்திய அரசு கும்பகோணத்திற்கு 110 கோடி ஒதுக்கப்பட்டு 40 கோடி மதிப்பீட்டில் வீட்டு வாசலில் குடிநீர் கிடைக்கின்ற திட்டத்தை அமுல் படுத்தியுள்ளது. இந்தத் திட்ட தொகையில் 30 சதவீத கமிஷன், இங்கு உள்ளவர்களின் கைக்கு சென்று மீதமுள்ள தொகைதான் செலவு செய்யப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் நாங்கள் வெற்றி பெற்றால், கும்பகோணத்தை எழில்மிகு ஆன்மிக மையமாக மாற்றும் முயற்சியில் நாங்கள் முழு மூச்சாக இறங்குவோம். திமுக கடவுளை நம்பாத கட்சி. எனவே அக்கட்சிக்கு வாய்ப்பளித்தால் இந்த மாற்றம் கும்பகோணத்தில் தான் தொடங்க வேண்டும். ஆன்மீக மாற்றத்தில் தான் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய முடியும். 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 6 கோடியே 50 லட்சம் கழிப்பறை இருந்தன. 2022 ஆம் ஆண்டில் 11 கோடி கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. எட்டு வருடத்தில் 11 கோடி கழிப்பறைகள் மத்திய அரசு கட்டியுள்ளது. இது மிகப்பெரிய சாதனை.
திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலம் ஆகியுள்ளது. 517 வாக்குறுதியில், ஏழு வாக்குறுதி கூட ஒழுங்காக நிறைவேற்றவில்லை. எட்டு மாதத்தில் திமுகவினர் செய்த நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஒன்று கூட இருக்காது. மத்திய அரசு பிரதமர் மோடியின் அரசு செய்துள்ள பல திட்டங்கள் நாங்கள் பட்டியலிட்டு பிரசுரித்து வெளியிட்டுள்ளோம். கும்பகோணம் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி பிப்ரவரி 5ஆம் தேதி இங்கு வருவதாக இருந்தார். அதே தேதியில் ஐதராபாத்தில் அவருக்கு நிகழ்ச்சி இருந்ததால் கும்பகோணம் வர இயலவில்லை. எனக்கு பிடித்த ஊர் கும்பகோணம் என்று கூறிய மோடி விரைவில் கும்பகோணம் வர சாத்தியக்கூறுகள் உள்ளன.
திமுகவுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள் அது ஊழல் கட்சி சர்க்கரையில் ஊழல் செய்தது உங்கள் எல்லோருக்கும் தெரியும். பொங்கலுக்கு கொடுத்த 21 தொகுப்பு பொருட்களில் கரும்பு வாங்கியதில் 33 கோடியும் மஞ்சள் பை வாங்கியதில் 130 கோடியும் சர்வ சாதாரணமாக ஊழல் செய்து திமுகவினருக்கு இந்த ஊழல் பணம் சென்றுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென கோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளோம். இந்தியா முழுவதும் 172 கோடி தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது ஒரு சாதனை.
நீட் தேர்வு ஏழைகளுக்கு பயனுள்ள தேர்வு. நீட் தேர்வுக்கு முன்பாக தனியார் மருத்துவக்கல்லூரிகள் தங்களுக்கு தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தி, ஒரு சீட்டை ஒரு கோடி வரை பேரம் பேசி பணம் சம்பாதித்தன. நீட் தேர்வு வந்த பிறகு அனைவருக்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தியதன் விளைவாக ஏழை பணக்கார மாணவர்கள் என்ற பாகுபாடு களையப்பட்டு நன்கு படித்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் திமுக மட்டும் இதனை எதிர்க்கிறது காரணம் பெரும்பாலான மருத்துவ கல்லூரிகள் திமுக பிரமுகருக்கு சொந்தமானது. இதனால் அவர்களுக்கு வருமானம் பாதித்தது. திமுகவினர் நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu