கும்பகோணத்தில் வாழைப்பழம் விலை வீழ்ச்சி - ஒரு சீப்பு ரூ.5-க்கு விற்பனை

கும்பகோணத்தில் வாழைப்பழம் விலை வீழ்ச்சி - ஒரு சீப்பு ரூ.5-க்கு விற்பனை
X

கும்பகோணத்தில் விற்பனை ஆகாமல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாழைத்தார்கள்.

கும்பகோணத்தில் வாழைப்பழம் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு சீப்பு ரூ.5-க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கும்பகோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாழை இலை, பூ, தண்டு, காய், பழம் என தனித்தனியே விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைத்து வருவதால் கும்பகோணம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வாழைப்பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கும்பகோணம் பகுதி வாழை விவசாயிகள் கூறியதாவது:-

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முகூர்த்த தினங்கள் அதிகளவில் இருப்பதால் வாழை இலை மற்றும் வாழைப்பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தபோதும் இந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வாழைப்பழங்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தைகளில் வாழைத்தார்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அவற்றை வாங்கி செல்ல முன்வரவில்லை. கடந்த மாதம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சீப்பு வாழைப்பழம் இன்று ரூ.5-க்கு விற்கப்பட்டது.

இதையும் பொதுமக்கள் வாங்கி செல்ல முன்வரவில்லை. இதனால் வாழைத் தாரை வெட்டி சந்தைக்கு எடுத்து வருவதற்கு ஆகும் செலவுக்கு கூட வாழைப்பழங்கள் விற்பனை ஆவதில்லை. இது வாழை விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்து வீணாகுகின்றன. மழை பாதிப்பை கணக்கீடு செய்யும் அரசு அதிகாரிகள் எங்களை போன்ற விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் முறையாக கணக்கீடு செய்து தேவையான இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!