கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் சேர அழைப்பு

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (பைல் படம்)
கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரியில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் துரையரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2021-22 ஆம் கல்வியாண்டில் இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்காக கடந்த திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இடைநிலை வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மின்னஞ்சல் முகவரி சேர்க்கை தொடர்பான குறுஞ்செய்திகளை எஸ்எம்எஸ் பெறுவதற்கு வசதியாக பயன்பாட்டில் உள்ள தங்களது மொபைல் எண் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேசிய மாணவர் படை சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ், முன்னாள் ராணுவத்திற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் உரிய சான்றிதழ் விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
மாணவ, மாணவிகள் பிளஸ் டூ வகுப்பில் படித்த படிப்புகளுக்கு ஏற்ப கல்லூரியில் சேர விரும்பும் தகுதியான பாடப் பிரிவுகள் மட்டுமே இணைய தளத்தில் தோன்றும். அந்தப் பாடப் பிரிவுகளில் மாணவர் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். ஒருவர் ஒரு கல்லூரியில் எத்தனை பாடப்பிரிவுகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் எத்தனை கல்லூரிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பதிவு கட்டணமாக ரூ 2 மட்டும் செலுத்த வேண்டும். பிற வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பதிவு கட்டணத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ 50 செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவோ கிரெடிட், டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ செலுத்த வேண்டும். செலுத்த இயலாத மாணவர்கள் the director, directorate of collegiate education, Chennai -06 என்ற பெயரில் 26-07-2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 044-28260098, 28271911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த கல்லூரியில் சுழற்சி ஒன்று கலை பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், அறிவியல் பிரிவுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், புள்ளியியல், புவியியல் மற்றும் வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் சுழற்சி இரண்டில் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்தப் பாடப் பிரிவுகளில் 70% மாணவர்களும் 30% மாணவிகளும் அரசு விதிமுறைகளை பின்பற்றி சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்லூரியில் சேர விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu