கும்பகோணம் அருகே மின்கம்பியில் டிப்பர் லாரி உரசியதால் தீ விபத்து
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மின் நிலையம் அருகே உள்ள சோழன் மாளிகை வழியாக உயர் மின்னழுத்த கம்பிகள் அமைக்கப்பட்டு அதிக மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
சோழன் மாளிகைக்கு அருகே மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் 4 வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த லாரிகள் மூலம் மண் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. அப்பகுதிக்கு டிப்பர் லாரி மூலம் மணல் கொண்டு வரப்பட்டது. அப்போது உயரழுத்த மின்கம்பி செல்லும் பகுதிக்கு கீழே மண்ணை இறக்கிய போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் முதுகுளத்தூர் கோகுல் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் டிப்பர் அமைப்பை வரையறுக்கப்பட்ட அளவை தாண்டி மேலே தூக்கினார். அப்போது லாரியின் மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியின் மீது டிப்பர் உரசியது. இதனால் டிப்பர் மீது மின்சாரம் பாய்ந்து பெரிய சத்தத்துடன் தீப்பிழம்புகள் கொட்டின. மேலும் லாரியின் பின்பகுதியில் தீப்பிடித்தது.
உடனே டிரைவர் கண்ணன் லாரியை விட்டு இறங்கி ஓடினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் அங்கு இருந்த ஊழியர்களே லாரி மீது தண்ணீரை ஊற்றி லாாியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் லாரியின் 6 டயர்கள் வெடித்து சிதறி லாரியின் பின்புறம் முற்றிலும் எரிந்து நாசமடைந்து விட்டது. மின்சாரம் தாக்கி லாரியில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu