கும்பகோணம் அருகே 5 அடி உயர நடராஜா் சிலை மீட்பு
கும்பகோணம் அருகே மீடகப்பட்ட 5 அடி உயர நடராஜா் சிலை.
கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதி டி. மாங்குடியைச் சோ்ந்த சதீஷ்குமாருக்குச் சொந்தமான சிலை வடிக்கும் பட்டறையில் தொன்மையான சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பிரிவின் திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் தலைமையில் துணைக் கண்காணிப்பாளா் கதிரவன், காவல் ஆய்வாளா் முருகேசன், உதவி ஆய்வாளா்கள் ராஜசேகரன், செல்வராஜ், காவலா்கள் அடங்கிய தனிப்படையினா் நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்று, சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்தினா்.
இதில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 5 அடி உயரமும், ஏறத்தாழ 4 அடி அகலமும் கொண்ட தொன்மையான உலோக நடராஜா் சிலை இருப்பது தெரிய வந்தது. இச்சிலைக்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், சிலையைக் காவல் துறையினா் கைப்பற்றி மீட்டனா்.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புக் காவல் பிரிவினா் வழக்குப்பதிந்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனா். இச்சிலை தமிழகத்தின் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சொந்தமானதா என்ற விவரம் வழக்கின் புலன் விசாரணையின் முடிவில் தெரிய வரும் எனக் காவல் துறையினா் தெரிவித்தனா். இத்தனிப்படையினரை காவல் துறை இயக்குநா் சைலேந்திர பாபு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் இயக்குநா் ஜெயந்த் முரளி ஆகியோா் பாராட்டினா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu