தானியங்கி போல் செயல்படும் இலவச உணவகம்

கும்பகோணத்தில் "பசித்தவர்கள் எடுத்து செல்லலாம்" என இலவச உணவகம் தானியங்கி போல் செயல்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உணவுக்காக பிறரிடம் கையேந்த தயங்கும் பொதுமக்கள், தாமே சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொட்டலங்களை எடுத்து பசியாற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கும்பகோணம் இளைஞர்கள் குழுவினர் 'அன்பு சுவர்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கியுள்ளனர்.
கும்பகோணத்தில் ஆதரவற்றோர் பலர் தெருக்களையே வீடுகளாக கொண்டு வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது.
அதே போல் அன்றாட கூலித்தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்துள்ளதால், உணவுக்காக சிரமப்பட்டு வருவதை உணர்ந்த இளைஞர்கள், இவர்களுக்கு உணவு வழங்க அன்பு சுவர் என்ற இயக்கத்தை தொடங்கினர்.
இதன்மூலம் தினமும் மதிய உணவாக தயிர், தக்காளி, எலுமிச்சை, சாம்பார் சாதம் என 100 பொட்டலங்களை கட்டி, சாரங்கபாணி கோயில் சன்னதி தெருவில் கணிதமேதை ராமானுஜன் நினைவிடம் அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்துவிடுவர்.
பசி போக்க நினைக்கும் யாரும் அங்கு சென்று தனக்கு தேவையான உணவு பொட்டலத்தை எடுத்துக் கொள்ளலாம். இது குறித்து கும்பகோணம் இளைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் கூறியதாவது: உணவுக்காக சிலர் பிறரிடம் சென்று உதவி கேட்க தன்மானம் தடுக்கலாம். எனவே, தான் நாங்கள் உணவை தயாரித்து பொட்டலங்களில் வைத்துவிடுவோம்.
பசிப்போர் அங்கு சென்று உணவை எடுத்து பசியாறலாம். எங்களது நோக்கம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் எடுக்கலாம் என்ற அடிப்படையில் இளைஞர்களாக சேர்ந்து இந்த அன்பு சுவரை எழுப்பியுள்ளோம். தினமும் 100 பேருக்கு என தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம். இதற்கு மக்களிடம் உரிய ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் அதிகளவில் உணவு வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu