ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம்
X
எவர்சில்வர், பித்தளை பாத்திர தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தாராசுரம் மற்றும் எலுமிச்சங்காபாளையம் பகுதிகளில் 40 எவர்சில்வர் பாத்திர உற்பத்தி கூடங்களும், 50 பித்தளை பாத்திர உற்பத்தி கூடங்களும் உள்ளன.

இந்த கூடங்களில் 1,200 தொழிலாளர்கள் ஒப்பந்த கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு உற்பத்தியாளர்களால் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது.

இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், 75 % கூலி உயர்வும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கொரோனா ஊரடங்கு, மூலப்பொருட்களின் விலை உயர்வால் விற்பனை சரிந்துள்ளதாகவும், எனவே தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை 8 சதவீதம் தான் வழங்க முடியும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூலி உயர்வு தொடர்பாக மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் முன்பாக, எவர்சில்வர் - பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினர் இடையே தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையில் தாராசுரத்தில் நேற்று தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் உற்பத்தியாளர்களுக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்படாததால் இன்று முதல் கூலிதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தால் பித்தளை பாத்திரங்களின் உற்பத்தி குறைவதோடு மட்டுமன்றி பித்தளை பாத்திரங்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!