பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பேருந்தில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலவழுத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் இலக்கியராஜா (21). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு ஆண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை மேலவழுத்தூரில் இருந்து தனியார் பேருந்தில் படியில் தொங்கியபடி கும்பகோணத்திற்கு வந்துள்ளார். இதில் கும்பகோணம் டைமண்ட் தியேட்டர் அருகே அவர் வந்த தனியார் பேருந்து தவறான பாதையில் சென்ற போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு பேருந்தில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் இலக்கியராஜாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இலக்கியராஜாவின் பெற்றோர் மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்காமல் தனது மகனை கொன்று விட்டதாக கூறி இலக்கிய ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல விடாமல் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மாணவனின் பெற்றோர் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story