நெற்பயிரை பாதிக்கும் பாசி கட்டுப்பாடு: வேளாண் அதிகாரிகள் விளக்கம்
பெரிய கோட்டை வைத்தீஸ்வரன் வயலில் பாசியினை கட்டுப்படுத்துவதற்கான காப்பர் சல்பேட் இடும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
சம்பா நெல் பயிரினை கருகச் செய்யும் பாசியினை கட்டுப்படுத்தும் காப்பர் சல்பேட் இடும் செயல் விளக்கம்.... பெரிய கோட்டை நெல் வயல்வெளி பள்ளியில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் செய்து காட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே உள்ள பெரிய கோட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்ற நெல் வயல் வெளிப்பள்ளியில் பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் குமார் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு ஆறு வகுப்புகள் நடத்தப்பட்டது.
முதல் இரண்டு பயிற்சிகளில் உயிர் உரம் மற்றும் நெல் நுண்ணூட்டம் பயன்பாடு பற்றி பயிற்சியை துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ் அளித்தனர். வேளாண் அலுவலர் இளங்கோ மற்றும் அட்மா திட்ட அலுவலர் சுகிர்தா நன்மை தீமை செய்யும் பூச்சிகள் பற்றிய விளக்கம் அளித்தனர்.
ஐந்தாவது பயிற்சியில் வேளாண் உதவி இயக்குனர் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதை குறைத்து தற்சார்பு முறையில் வயலை சுற்றி இயற்கையாக கிடைக்கும் வேம்பு நொச்சி போன்றவைகளின் இலை கரைசல்களை பயன்படுத்தி பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவது பற்றி செயல் விளக்கம் செய்து காட்டினார்.
பெரிய கோட்டை விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஆறாவது பயிற்சியில் அதிக அளவில் தற்போது நெற்பயிரை பாதிக்கும் பாசி கட்டுப்பாடு குறித்த செயல் விளக்கத்தினை செய்து காண்பிக்க கூறியிருந்தனர். அடிப்படையில் முன்னோடி விவசாயி வைரவ சுந்தரம் வயலில் பாசியை கட்டுப்படுத்துவதற்கான காப்பர் சல்பேட் இடும் செயல் விளக்கத்தினை
வேளாண் உதவி இயக்குனர் மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ் செய்து காட்டினார். தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பெரிய கோட்டை கீழக்குறிச்சி இளங்காடு சிரமேல்குடி அத்திவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல்தண்ணீர் பயன்படுத்தும் வயல்களில் அதிக அளவில் பாசியின் வளர்ச்சி காணப்படுகிறது. மண்ணில் அதிக சத்துள்ள இடங்களிலும் அதிக வெளிச்சம் உள்ள இடங்களிலும் பாசியின் வளர்ச்சி அதிகளவில் காணப்படுகிறது. மேலும் நீர் உவர்நீராக உள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் நெல்லுக்காக இடும் டிஏபி மற்றும் சூப்பர் உரங்களை அதிக அளவில் பாசி எடுத்துக்கொண்டு பயிரின் வளர்ச்சி நறுங்கி காணப்படும். ஒவ்வொரு நெல் குத்தை சுற்றிலும் பாசி அடர்ந்து வேரின் காற்றோட்டத்தை முற்றிலும் தடுத்து விடுவதால் வேரின் வளர்ச்சி குறைந்து மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதால் நெல் பயிர் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும். பாசியின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு இரண்டு கிலோ காப்பர் சல்பேட்டினை வாங்கி பழைய வேட்டி துணிகளில் 100 கிராம் வீதம் சிறுசிறு பொட்டலங்களாக கட்டி ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் ஆங்காங்கே போட்டு விட வேண்டும்.
காப்பர் சல்பேட் நீரில் கரைந்து அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள பாசி முழுவதையும் கட்டுப்படுத்துவதோடு மேலும் பாசியின் விதைகளையும் கட்டுப்படுத்தும். காப்பர் சல்பேட் தெளித்த கையோடு வரிசை நடவு செய்துள்ள வயலாக இருக்கும் பட்சத்தில் மரக்குச்சி வறண்டிகளை பயன்படுத்தி பாசியை ஒரு பக்கமாக ஒதுக்கி வெளியேற்ற வேண்டும். டிஏபி உரம் இடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
பாசியின் வளர்ச்சி மேலும் தென்பட்டால் 15 நாள் கழித்து மீள் காப்பர் சல்பேட் உரத்தினை இட்டு கட்டுப்படுத்தலாம். என்பதை வேளாண் உதவிய இயக்குனர் மதுக்கூர் பெரிய கோட்டை வைரவ சுந்தர வயலில் வயல்வெளி பள்ளி விவசாயிகள் அனைவரையும் கலந்து கொள்ள செய்து செயல் விளக்கமாக செய்து காட்டினார். செயல் விளக்கத்தில் முன்னோடி விவசாயிகள் இளமாறன் ரங்கசாமி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu