முத்தரசநல்லூரில் ஊட்டச்சத்து -கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு

முத்தரசநல்லூரில் ஊட்டச்சத்து -கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு
X

ஊட்டச்சத்து உணவு கண்காட்சியில், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தூய்மை இந்தியா இயக்கம் போன்று மக்கள் இயக்கமாக மாறினால் ஊட்டச்சத்து திட்டமும் வெற்றி பெறும்.

ஊட்டச்சத்து மாதம், கோவிட் தடுப்பு மற்றும் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் குறித்து ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பர அலுவலகம் முத்தரசநல்லூரில் நேற்று நடத்தியது.

அந்தநல்லூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்,அந்தநல்லூர் பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் அறிமுகவுரையாற்றிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் கே தேவி பத்மநாபன் பேசியதாவது:

2018 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதே லட்சியமிக்க இத்திட்டத்தின் முழுமையான லட்சியம், அதுவே பிரதமரின் நோக்கம், தூய்மை இந்தியா இயக்கம் போன்று மக்கள் இயக்கமாக மாறினால் ஊட்டச்சத்து திட்டமும் வெற்றி பெறும்.

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக ஊட்டச்சத்து சவால்களுக்கான தேசிய குழு அறிவித்தது. செப்டம்பர் 1 முதல் 7 வரை ஊட்டச்சத்து மிக்க மரக்கன்றுகளை நடுதல், செப்டம்பர் 7 முதல் 15 வரை ஆரோக்கியத்தில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல், செப்டம்பர் 16 முதல் 23 வரை அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குதல் மற்றும் செப்டம்பர் 24 முதல் 30 வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு ஊட்டச்சத்து மிக்க உணவை அவர்களுக்கு வழங்குதல் என நான்கு மைய திட்டங்களை கொண்டு இந்த வருட ஊட்டச்சத்து மாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை விடுதலையின் அம்ரித் மகோத்சவமாக நாடு கொண்டாடி வரும் வேளையில், குறிப்பாக அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்கள் நினைவு கூற வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 18 வயதான அனைவருக்கும் கோவிட் தடுப்பு மருந்தை இலவசமாக அரசு வழங்கி வருகிறது என்று பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய அந்தநல்லூர் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் எஸ் துரைராஜ், பெருந்தொற்றை தடுப்பதற்காக அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், பண்டைய ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மக்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்ததாக சிறப்புரை ஆற்றிய முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் டி ஆதிவாசன், ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் இலவச தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொண்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் கோகிலா சிறப்புரை ஆற்றி பேசியதாவது: ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதில் 11 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முருங்கை கீரை, தவசி கீரை மற்றும் நெல்லிக்காயின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அவர், ஆரோக்கியமிக்க குழந்தைகளை பெற கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட வேண்டும் என்றார். ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரித்விராஜ், கோவிட்டின் மூன்றாவது அலையை தடுக்க அனைவரும் தடுப்புமருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஊட்டச்சத்து மிக்க உணவை உறுதி செய்வதில் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கினார்.

சிறப்புரை ஆற்றிய ஊட்டச்சத்து திட்டத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி பிரியங்கா, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஊட்டச்சத்து மிக்க உணவை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை, காய்கறிகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவை கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டும் என்று கூறினார்.

எல் ஈ டி நடமாடும் விழிப்புணர்வு வாகனம் முத்தரசநல்லூரில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வாகனம் செல்கிறது.

அங்காள பரமேஸ்வரி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவினர், ஊட்டச்சத்து மாதம் மற்றும் கோவிட் குறித்த விழிப்புணர்வை தங்கள் பாடல்கள் மற்றும் நாடகம் மூலம் ஏற்படுத்தினர்.

ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கண்காட்சி முத்தரசநல்லூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியின் போது பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!