மதுக்கூர் வடக்கு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்கக் குழு கூட்டம்
மதுக்கூர் வடக்கு கிராமத்தில் நடைபெற்ற கிராம அளவிலான திட்ட செயலாக்கக் குழுவின் முதல் கூட்டம்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு கிராமத்தில் கிராம அளவிலான திட்ட செயலாக்கக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
கிராம திட்ட செயலாக்க குழுவானது கிராம ஊராட்சி மன்றதலைவரை தலைவராகவும், மக்கள் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுவின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும், வேளாண்மை துறை உட்பட்ட 16 துறைகளின் அதிகாரிகளை உள்ளடக்கியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கும் பணிகளை வேளாண் துறை முன்னெடுத்து செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தலைமையில், துணை ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் கார்த்திகேயன், தர்மராஜ், மூர்த்தி, நைனா முகமது, திருஞானசம்பந்த மூர்த்தி மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் ஆகியோர் வேளாண்துறை சார்பில் கலந்துகொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் கிராமத்தின் அடிப்படை விபரங்கள் மற்றும் அனைத்து விவசாயிகளின் அடிப்படை விபரங்களை சேகரிப்பதற்கான படிவங்களை விவசாயிகள் பதிவு செய்வதற்கான முறைகளை எடுத்துக் கூறினார்.
வேளாண் அலுவலர் சாந்தி வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து மானியத்திட்டங்கள் பற்றி செயலாக்க குழு கூட்டத்தில் எடுத்துரைத்தார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் வேளாண் துறையின் திட்டங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது பற்றி எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கைத்தெளிப்பான்கள் மற்றும் உளுந்து விதை, தென்னங்கன்றுகள் மற்றும் பவர் டில்லர்கள் மற்றும் கடப்பாறை மண்வெட்டி போன்றவை விவசாயிகளுக்கு அதிக அளவில் தேவைபடுவதாக தெரிவித்துள்ளனர். கிராம அளவில் மூன்று குளங்களை தூய்மை செய்து கரை உயர்த்தி படித்துறை ஏற்படுத்தித்தரவும், முன்பே கட்டி தரப்பட்டு சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள குளங்களை சீர்படுத்தி தரவும் கிராம சாலைகள் அமைத்து விடவும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடங்கலின்றி வழங்கிடவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விடுபட்ட விவசாயிகள் பஞ்சாயத்து அலுவலகத்தில் படிவத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுடைய அடிப்படை விவரங்களை உரிய ஆவணங்களுடன் வெள்ளிக்கிழமைக்குள் வழங்கிட வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். கூட்டம் மதுக்கூர் வடக்கு மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu