இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி
செயல் விளக்கம் செய்துகாட்டும் விவசாயி.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே அத்திவெட்டி கிராமத்தில் பரம்பராகட் கிருசி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 26 விவசாயிகள் ஒருங்கிணைந்து தென்னை இயற்கை விவசாயிகள் குழுவினை அமைத்துள்ளனர்.
முழுக்க முழுக்க இயற்கை சாகுபடி மட்டும் செய்ய உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து இரசாயன உரங்களை தவிர்த்து விவசாயி தனது வீட்டில் கிடைக்கும் தனது தோப்பில் வளர்க்கும் கால்நடைகளை மட்டும் பயன்படுத்தி தயாரிக்க கூடிய மிகக் குறைந்த செலவிலான இயற்கை இடுபொருட்களான அமுதக்கரைசல் ஜீவாமிர்த கரைசல் தேமோர் கரைசல் மூலிகை பூச்சி விரட்டி மீன் அமினோ அமிலம் போன்றவைகளை குழு உறுப்பினர்கள் தொழில் நுட்பங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதோடு அனைவரும் இதனை தயாரித்து பயன்படுத்தவும் துவங்கியுள்ளனர்.
பல உறுப்பினர்கள் காலங்காலமாய் ரசாயன ஒரு கலப்பின்றி விவசாயமும் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஊடுபயிராக குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய அதிக நீர் தேவை இல்லாத மக்காச்சோளத்தினை முன்னோடி விவசாயி அத்திவெட்டி ராமமூர்த்தி தேர்வு செய்து மக்காச்சோளத்துக்கு நாற்றங்கால் தயார் செய்து நடவு வயல் போல தென்னந்தோப்பில் ஊடுபயிராக மேட்டுப்பாத்திகள் அமைத்து மக்காச்சோளத்தினை நடவு செய்துள்ளார்.
10 நாள் பயிராக உள்ள மக்காச்சோளத்தில் அடி உரம் மேலுரம் எதற்கும் ரசாயன உரத்தை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரத்தை மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்ய திட்டமிட்டு அதன் ஒரு பகுதியாக பத்து நாளான பயிரில் பயிரின் வளர்ச்சிக்கு தேவையான அமுத கரைசல் மற்றும் ஜீவாமிருத கரைசலை தயாரித்து மேட்டுப்பாத்தியில் மக்காச்சோள பயிரிலிருந்து நாலு அங்குலம் தள்ளி ஊற்றி செயல் விளக்கம் செய்து காட்டினார்.
அமுதக்கரைசல் ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்துவதால் பயிரின் வளர்ச்சியில் சிறப்பாக அமைவதோடு 40வது நாள் மீன் அமில கரைசலை பயிருக்கு தெளித்து அதிக மகசூல் பெறவும் திட்டமிட்டுள்ளதை விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அத்திவெட்டி தென்னை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி பயிர் எதுவானாலும் அதனை மேட்டுப்பாத்தி அமைத்து அதில் விதைத்தோ நடவு செய்தோ சாகுபடி செய்வதால் வேர்கள் காற்றோட்டத்துடன் மிக விரைவாக இடுபொருள்களை எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருப்பதை பற்றி குழு உறுப்பினர்களுடன் விளக்கிக் கூறினார்.
முன்னோடி குழு உறுப்பினர்கள் ராஜகிருஷ்ணன் நல்லதம்பி வடிவேல் மூர்த்தி பாலசுப்ரமணியன் ரமேஷ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கம்பு, மக்காச்சோளம் போன்றவை தற்போது நல்ல விலையும் கிடைப்பது பற்றி எடுத்துக் கூறி சாகுபடி செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
விருத்தாச்சலத்தில் அதிக அளவில் கிடைக்கும் செடி முந்திரிப் பயிர்களை தென்னை விவசாயிகளுக்கு பெற்று தர அத்திவெட்டி ராமமூர்த்தி கேட்டுக்கொண்டார். வேளாண் உதவி இயற்கை முறையில் சாகுபடி செய்யும் மக்காச்சோள பயிரில் வரும் புழுக்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்திட தேவையான இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்துவது பற்றி எடுத்து கூறினார்.
வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் வீரிய ஒட்டுமக்காச்சோள பயிர்களை சாகுபடி செய்யும் போது பயிருக்கு பயிர் இடைவெளியும், மேட்டுப்பாத்திகளுக்கு இடையிலான இடைவெளியையும் அதிகரிப்பதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் ராஜு ஆகியோர் செயல் விளக்கத்தினை ஒருங்கிணைத்தனர்.
வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu