தமிழகத்தை குப்பைத்தொட்டியாக்கும் கேரளா: எல்லை செக்போஸ்டில் என்ன நடக்கிறது?
மலைபோல் குவிந்திருக்கும் மருத்துவ கழிவுகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம். அதன் எதிரே உள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப்பொருட்களை லாரிகள் மூலம் நள்ளிரவில் மர்ம நபர்கள் கொட்டிச் சென்றதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
அதனால், அப்பகுதி முழுவதும் உள்ள கிராம மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கேரள கழிவுகளை தீயிட்டு கொளுத்தாமல் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் இருந்து இவ்வாறு அடிக்கடி கழிவுகளை கொண்டுவந்து தமிழகத்திற்குள் கொட்டிச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. தமிழகம் என்ன குப்பைத் தொட்டியா..? தமிழக-கேரள எல்லை சோதனை சாவடியான புளியரையைத் தாண்டித்தான் தமிழகத்திற்குள் நுழைய வேண்டும். சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்யாமல் அனுப்புகின்றனரா? அல்லது பணத்திற்காக சிலர் விலை போகின்றனரா என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கின்றனர் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
காவல்துறையினர் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் லாரிகளின் சோதனையை தீவிரமாக்க வேண்டும். கழிவுப்பொருட்களை கொண்டு வரும் லாரி உரிமையாளர் மற்றும் அதன் ஒட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனமாகவும், காசுக்காக தமிழகத்தை குப்பைத்தொட்டியாக்க நினைக்கும் சோதனை சாவடி அலட்சிய பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களும் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குப்பையை கொட்டுவதற்கு கேரளாவில் இடமில்லையா? இடம் இருந்தும் கூட தமிழகத்தை குப்பைத்தொட்டியாக்க நினைக்கும் கேரளாவுக்கு சரியான பதிலடி கொடுப்பதை விட்டு விட்டு, காசுக்காக விலை போவது சரியா? லாரி உரிமையாளர்களும், லாரி ஓட்டுனரும் கொஞ்சம் தமிழக நலனை மனதில் கொள்ளலாமே?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu