சங்கரன்கோவில் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதம்: வேட்பாளர்கள், முகவர்கள் அவதி
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெற்றதால் வேட்பாளர்களின் உறவினர்கள், முகவர்கள் வெளியே காத்திருக்கின்றனர்.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெறுவதால் வேட்பாளர்களின் உறவினர்கள், முகவர்கள் உள்ளிட்ட பலர் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலையும் பொருட்படுத்தாது அவர்கள் காத்திருக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையம் புளியங்குடி அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய குழு உறுப்பினர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட கூடியவர்களின் உறவினர்கள் பாலிடெக்னிக் கல்லூரி வெளியே காத்திருக்கின்றனர்.
குருவிகுளம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சங்கரன்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் பிற்பகல் 2.30 மணி ஆகியும் முதல் சுற்று முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளியே காத்திருக்கும் வேட்பாளர்களின் உறவினர்கள் தாங்கள் கொண்டு வந்த தண்ணீர் உணவு எல்லாவற்றையும் காலி செய்துவிட்டனர்.
ஊருக்கு வெளியே மையம் இருப்பதால் தொலைத்தொடர்பு வேறு கிடைக்கவில்லை. இதனால் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து கதை பேச ஆரம்பித்துவிட்டனர். தேர்தல் மேற்பார்வையாளர் வந்து பார்வையிட்டதும் வேகமாக பணி நடப்பதுபோல் இருந்தது. அவர் சென்றதும் மீண்டும் ஆமை வேகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால் வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், வெளியே காத்திருக்கும் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu