கொள்முதல் செய்வதில் தாமதம்: மூட்டையில் நெற்பயிர் முளைக்கும் அவலம்

நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால், மூட்டைகளில் நெற்பயிர்கள் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில், மேட்டுக்கால் பாசனத்தின் கீழ், கார் பருவ சாகுபடியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. அதில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அறுவடை பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அறுவடை செய்த நெற்பயிர்களை, அரசு நெல் கொள்முதல் நிலையம் மூலம், விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் மோட்டை ரகம் ரூ.806-க்கும், சன்னம் ரகம் ரூ.824-க்கும் கொள் முதல் செய்யப்படுகிறது. தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால், சாலை ஓரங்களில் நெற்பயிர்களை குவியல் குவியலாகவும் , மூட்டை மூட்டைகளாகவும் அடுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் முளைக்க துவங்கியுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மூட்டைகளை ஏற்றி செல்வதற்கு வாகன வசதி இல்லாததாலும், நெற்பயிர்களில் அதிகளவு ஈரப்பதம் இருப்பதாலும் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து அறுவடை செய்த நெற்பயிர்களை சாலையில் குவித்து வைத்திருப்பது, விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேக்கமடைந்து நெல் மூட்டைகளை ‍கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story