அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது..!
அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட லட்சுமணன் புகைப்படம்
கடையநல்லூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று பேரிடம் ரூபாய் 20 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் கொழும்பு செட்டியார் தெருவை சார்ந்தவர் துரைராஜ் மகன் லட்சுமணன் என்ற லட்சுதளபதி இவர் கிருஷ்ணாபுரம் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கிருஷ்ணாபுரம் மாரியப்பன் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் தலா 8 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கொழும்பு செட்டியார் தெரு சண்முகநாதன் மகள் சித்ராவிடம் 4லட்சத்து 50ஆயிரம் ரூபாயும் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லையென்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் போலியாக பணி நியமன ஆணை தயார் செய்து பணம் கொடுத்த மூன்று பேருக்கும் பல்வேறு அரசுத் துறைகளில் வேலையில் சேர்வதற்கான பணி நியமன கடிதத்தை லட்சுமணன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து மூன்று பேரும் அந்த இடங்களில் வேலைக்குச் சேர்வதற்காக சென்ற போது லட்சுமணன் வழங்கிய அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் பாண்டியராஜன் உட்பட மூன்று பேரும் புகார் கொடுத்தனர்.
அந்தப் புகார் மனுவில் லட்சுமணன் என்பவர் எங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக எங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியர் போன்று கையொப்பமிட்ட போலி பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். லட்சுமணன் என்பவர் உடன் அய்யனார் என்பவர் எங்களிடம் அரசு வேலை இருப்பதாகவும் அதற்கு நீங்கள் பணம் கொடுத்தால் லட்சுமணன் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் எங்களிடம் கூறினார்.
அதை நம்பி நாங்கள் லட்சுமணனிடம் பணம் கொடுத்தோம். எங்களுக்கு வேலை வாங்கி தரவில்லை. நாங்கள் கேட்டபோது மாவட்ட ஆட்சியர் போன்று போலியாக பணி நியமன ஆணை கையொப்பமிட்ட கடிதம் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி லட்சுமணனை கைது செய்தார். மேலும் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலி பணி நியமன ஆணை வழங்கிய சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu