ஊரும் பேரும் - தெரிந்த ஊர் தெரியாத வரலாறு
ஊரும் பேரும் - தெரிந்த ஊர் தெரியாத வரலாறு
தென் பொதிகை தென்றல் வீசும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த அழகே உருவான ஊர் கடையநல்லூர்.
கருப்பாநதி பாயும் கடையநல்லூருக்கு பல சிறப்புகள் உண்டு. கரும்புசாறு போல் இனிப்பாக இருக்கும் நீர்வளம் உடையதால் கருப்பாநதி எனப்பெயர் பெற்றது. கருப்பாநதி பாயும் கடையநல்லூரில் சுவாமி கடகாலீஸ்வரர், துணைவியார் கரும்பால்மொழி அம்மையாருடன் அருள்பாலிக்கின்றனர்.இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
அகத்திய மாமுனி தென்னாடு விஜயம் மேற்கொண்டபோது ஒருமுறை கடையநல்லூருக்கு வந்தார். அப்போது இடையர்கள் பால் கொடுத்து உபசரித்தனர்.அந்த பாலை மூங்கில் கடகாலில் ஊற்றி கொடுத்துவிட்டு தாங்கள் மாடு மேய்க்க சென்றுவிட்டனர். இவர் அந்த கடகாலையே கவிழ்த்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வழிபாடு முடிந்து அகத்தியர் சென்றுவிட்டார்.
மாலையில் இடையர்கள் இந்த கடகாலை நிமிர்த்தியபோது அதை நிமிர்த்த முடியவில்லை.முடியாததால் அதை கோடாரி கொண்டு வெட்டினர். அப்போது கடாகாலையில் கோரை ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதை பார்த்து பயந்து போய் இடையர்கள் மன்னர் வல்லப பாண்டியனிடம் போய் முறையிட்டனர்.பார்வை குறைபாடுடைய அம்மன்னர் வந்து அந்த கடகாலை தம் இரு கரங்களால் தடவி பார்த்து கண்களில் ஒற்றிக் கொள்ளவும் கண் பார்வை கிடைத்தது. இதனால் மனமகிழ்ந்து, கண் கொடுத்த கமலேசா என வாயார புகழ்ந்து இந்த கடகாலீஸ்வரர் கோவிலை கட்டினார்.
கடகாலில் தோன்றியதால் கடகாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அதுவரை வில்வபுரி என்றும் திருமலைகொழுந்துபுரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், கடகால் நல்லூர் என்றும் நாளடைவில் கடையநல்லூர் என மருவியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இந்த பகுதியில் இடையர்கள் மிகுதியாக வசித்து வந்தமையால் கிருஷ்ணர் வழிபாடு மற்றும் அவரது சகோதரியான சக்தி வழிபாடும் உருவானது. இத்தல கிருஷ்ணன் நவநீதகிருஷ்ணன் என்ற நாமத்துடன் வழிபடப்படுகிறார்.இதையடுத்து கோவில் பூஜைக்காக குடியமர்த்தப்பட்ட அந்தணர்கள், கிருஷ்ணரையும், சக்தி வடிவான கருமாஷி அம்மாளையும் வழிபட தொடங்கினர். இத்தல அம்மனுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. கருவை காப்பவள், மாட்சிமைப்படுத்துபவள் என பொருள்.
இந்த பகுதி பெண்கள் கர்ப்பமுற்றால் இந்த தாயிடம் வேண்டி கொள்வார்கள்.தாயும் சேயும் நல்லபடியாக பிறந்தால் மஞ்சளை சாற்றி வழிபடுவதாக வேண்டிக்கொள்வார்கள். நல்லபடியாக பிரசவம் ஆகும். பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவர். இதுபோல் மாடு கன்று போட்டாலும் அம்மனுக்கு மஞ்சனை சார்த்தி நன்றி செலுத்தும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.
இக்கோவிலில் நவராத்திரி பூஜை, பவுர்ணமி பூஜை, சங்கடஹர சதூர்த்தி பூஜைகள் ஆகியவையும் மாசி மாத பவுர்ணமி பூஜை காலையில் ஹோமங்கள், அபிஷேகங்கள் ஆராதனைகளும் மாலையில் திரிசதி அர்ச்சனை பாராயணங்களும் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. இதுதவிர செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் விமரிசையாக நடந்து வருகின்றன...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu