தமிழகத்தை உலுக்கிய மரணங்கள் : வீதி வீதியாக அஞ்சலி செலுத்திய மக்கள்..!

தமிழகத்தை உலுக்கிய மரணங்கள் :  வீதி வீதியாக அஞ்சலி செலுத்திய மக்கள்..!
X

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்.

சமீபத்திய மரணங்களில் அப்துல்கலாம், ஜெயலலிதா, கருணாநிதிக்கு அடுத்து விஜயகாந்த மரணம் தான் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பொதுவாகவே வி.ஐ.பி.,க்கள் இறந்தால் மக்கள் கூடுவதும் அஞ்சலி செலுத்துவதும் வழக்கம். காமராஜர், அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., இறந்த போது ஒட்டுமொத்த தமிழகமும் அழுதது அத்தனை பேருக்கும் தெரியும்.

சமீபத்திய மரணங்களில் தமிழகத்தை உலுக்கியது அப்துல்கலாம் மரணம் தான். அவரது மரணத்தை கண்டு அழுகாத தமிழர்களே இல்லை என்ற அளவுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. வீதி, வீதியாக, ஏன் வீடு, வீடாக, ஊர் தோறும், நகரம் தோறும், கிராமம் தோறும் அப்துல்கலாம் படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அடுத்து இதேபோன்ற ஒரு பாதிப்பு ஜெயலலிதாவின் மரணத்தின் போது தமிழகத்தை புரட்டிப்போட்டது. அப்போது அழுதவர்கள், அதிர்ச்சியில் இறந்தவர்களும் அதிகம். பலர் மொட்டை போட்டு காரியங்களை செய்யும் அளவுக்கு இவரது மரணம் தமிழகத்தை உலுக்கியது.

அதன் பின் கருணாநிதியின் மரணம் தமிழகத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. ஜெயலலிதா, கருணாநிதி இருவரது இறப்பின் போதும், மக்கள் வீதி, வீதியாக அத்தனை இடங்களிலும் அவர்களது போட்டோக்களை வைத்து அஞ்சலி செலுத்தி மைக் செட் போட்டு சோகப்பாடல்களை ஒலிபரப்பினர். இவர்கள் எல்லாம் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி மக்களை கவர்ந்தவர்கள்.

ஆனால், சினிமாவில் நடித்து, அரசியலில் முன்னேறி வரும் நேரம் உடல்நலம் குன்றி ஏழு ஆண்டுகளாக மக்களை சந்திக்காமல் இருந்தவர் விஜயகாந்த். அப்படி இருந்தும் அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டது. அப்துல்கலாம், ஜெயலலிதா, கருணாநிதி மரணங்களின் போது தமிழகம் எப்படிஒரு சோகக் கடலில் மூழ்கியதோ அதே அளவு சோகத்தில் மீண்டும் தமிழகம் தவித்தது.

எந்தப் பாகுபாடும் இன்றி அத்தனை தமிழர்களும் விஜயகாந்தினை ஒரு தர்மத்தின் தலைவனாகவே பார்த்தனர். அவர் சினிமா வாழ்வில் இருந்து ஒதுங்கி பல ஆண்டுகளாகிப்போனது. அதேபோல் அரசியல் களத்தில் இருந்தும் விஜயகாந்த் சமீபத்திய ஆண்டுகளி்ல் விலகித்தான் இருந்தார். ஆனாலும் மக்கள் விஜயகாந்த் என்ற மாமனிதனை எள்ளளவும் மறக்கவில்லை.

கேப்டன் மட்டும் உடல் நலத்துடன் இருந்திருந்தால், தமிழகத்தில் பெரும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருப்பார் என்று ரஜினி கூறியது மிகவும் சரியான வார்த்தைகள். அந்த அளவு விஜயகாந்தினை மக்கள் நம்பினர். இப்போதும் கூட அவர் மறைந்து நான்கு நாட்களை கடந்த நிலையிலும், விஜயகாந்த் படங்கள், கட்அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் என தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது.

அதேபோல் விஜயகாந்த் மரணத்திற்கு பின்னர் தி.மு.க., அரசு நடந்து கொண்ட விதம், அவரது இறுதிச் சடங்கிற்கு தி.மு.க., அரசு செய்த பல செயல்கள், கொடுத்த அரசு மரியாதை அத்தனையும் முதல்வர் ஸ்டாலினின் பெருந்தன்மை நிறைந்த நடவடிக்கைகள் அத்தனையும் தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றதையும் கவனிக்க மறந்து விடக்கூடாது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!