மாணவர்களின் நடத்தை கோளாறு: கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஆசிரியரின் கடிதம்

இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிbவரும்bமாணவர்களது நடத்தைக் கோளாறுகள் பற்றி,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார் எழுதியிருக்கும் கடிதம் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எப்படி புரிய வைப்பது? என்னும் தலைப்பில் கையறு நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் நிலை பற்றி விரிவாக எழுதி இருக்கின்றார். இதுதான் அந்த கடிதம்.
ஆசிரியர்களுக்குப் பயந்து மாணவர்கள் படிக்கத் தொடங்கியதும், பட்டம் வாங்கி பார் புகழ உயர்ந்ததெல்லாம் கடந்த கால வரலாறு. இன்று மாணவர்களுக்குப் பயந்து ஆசிரியர்கள் தங்களது கற்பித்தலை நிகழ்த்த வேண்டிய நிலைக்கு மாற்றியிருக்கிறது கல்விமுறை அல்லது கற்றல் முறை.
All pass நடைமுறை தொடங்கியதிலிருந்தே ஆசிரியர்கள் fail ஆகத் தொடங்கி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து வெளியேறும் பல லட்சம் மாணவர்களில் மருத்துவ மாணவர்களை இன்னும் ஏன் சல்லடை போட்டுத் தேட வேண்டியிருக்கிறது? காரணம் All பாஸ். தரமான பாடத்திட்டம், தரமான கல்வி இருந்தும் தகுதித் தேர்வுகளுக்கோ நுழைவுத்தேர்வுகளுக்கோ தனியே Coaching centres –ஐ தேடிக்கொண்டிருக்கின்றோமே ஏன்? காரணம் All pass.
இதுவரை தமிழகப்பள்ளிகளில் நடக்காத சம்பவங்கள், அரங்கேறாத வன்முறைகள் இப்பொழுது மட்டும் எப்படி?தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தடுமாறிப் படித்தாலும் 9 -ஆம் வகுப்பிற்குள் நல்ல முறையில் தயாராகி, பெரும்பாலும்10ம் வகுப்பில் தன்னைக் கற்றலுக்கு முழுமையாகத் தயாராக்கி, பொதுதேர்வு எழுதி, தேர்ச்சி அடைகின்றனர் மாணவர்கள்.
அங்கு ஒரு தேக்கம் ஏற்பட்டால்,மறுமுறை முயன்று மீண்டும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும், தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவோ அல்லது திருந்திக்கொள்ளவோ ஒரு தருணம் அமையும். திருந்திக்கொள்ள முடியாத அல்லது திருந்தத் தயாராக இல்லாத மாணவர்கள் அதற்குமேல் கல்வி நிலையங்களை எட்டிப்பார்க்க இயலாது.
ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளிலும் All பாஸ்-ஐ கொரோனா அமல்படுத்தி விட்டது. ஆசிரியர்கள், மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. தன்னிடம் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி அடைவதைத் தவிர, ஓர் ஆசிரியருக்கு வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்து விடப்போகிறது? ஆனால், உரிய கற்றல் அடைவுகளோடு இல்லாத ஒருவன், ஒரே தர நிலையில் பிற மாணவர்களோடு இணைவதென்பது, ஒரு குடத்துப் பாலில் ஒரு துளி விசம் கலப்பதற்கு ஒப்பாகும் என்பதை உணராத வரை, உங்களுக்கு கல்வியின் ஆன்மா புரியாது.
பயிர்களோடு சேர்ந்து சில களைகளும் வளர்வதைப்போல, எவ்வித தடங்கலுமின்றி மேல்நிலை வகுப்புக்களுக்குள் நல்லொழுக்கமில்லாத சில மாணவர்களும் வந்துவிட்டனர். அத்தோடு அலைபேசியே கல்விக்கு இடையூறு என்ற நாம் அதனையே இன்றைக்கு கற்றல் உபகரணமாக்கி, 24 மணிநேர இணையதள வக்கிரங்களை அவர்களின் உள்ளங்கைகளுக்குள் திணித்து விட்டோம்.
சமூக வலைத்தளங்களின் பிடிக்குள் சிக்கிய மாணவர்களில் சிலர் தாயாகப் பார்க்க வேண்டிய ஆசிரியைகளை வேறாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். தந்தையாகக் கருத வேண்டிய கண்டிக்கும் ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். வளர்ந்துவிட்ட மாணவிகளுக்கு Over coat அணிந்தால் பாதுகாப்பு உணர்வு இருக்கும் என சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் Over Coat அணிவதே பாதுகாப்பாக இருக்குமோ என யோசிக்க வைத்திருக்கின்றது.
இன்றையச் சூழல் ஆசிரியர்களிடம் இருந்த பிரம்பை பிடுங்கி விட்டு, மாணவர்களிடம் கத்தியைக் கொடுத்துவிட்டதைப் போல ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கின்றது,இந்த சமூகம். இன்றைய மாணவர்கள் உடல்வயதில் சிறியவர்களாக இருந்தாலும் மனவயதில் மிகப் பெரியவர்களாக அனைத்தையும் அறிந்தே வைத்திருக்கின்றனர். ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் இது ஆசிரியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. மாணவர்களின் எதிர்காலத்தோடு, இந்த தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்னையும் கூட. ஆசிரியர்களைக் குற்றவாளிகளாகக் காட்ட முயற்சிக்கும் வரை, மாணவர் சமூகம் மாண்பு அடையாது.
ஆசிரியர்கள் அத்தனை பேரும் புனிதர்கள் என பாராட்டுப் பத்திரம் வாசிக்கச் சொல்லவில்லை. இங்கும் மதம், இனம், சாதி எனச் சாயங்களைப் பூசிக்கொண்டு திரியும் சிறுமதியாளர்களும் உண்டு. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது தயவின்றி நடவடிக்கை எடுங்கள். ஆனால், உங்களது கற்றல் சீர்திருத்தத்தை ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரத்தின்மீது கைவிலங்கிட்டு கல்வியைச் சிறையிலடைத்து விடாதீர்கள் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை ஓங்கி உரைக்கும் ஒரு ஆசிரியரின் மனக்குமுறல்கள். சட்டம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்வரை கல்வியின் மாண்பை நாம் காணமுடியாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu