டாஸ்மாக்கில் மூன்று நாட்களில் ரூ.1,200 கோடி வசூல்: கொந்தளிக்கும் சமூக வலைதளம்

டாஸ்மாக்கில் மூன்று நாட்களில் ரூ.1,200 கோடி வசூல்:   கொந்தளிக்கும் சமூக வலைதளம்
X

பைல் படம்.

துணிவு, வாரிசு படங்களை ஒரங்கட்டிய டாஸ்மாக் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் வேதனையான பதிவு.

பொங்கல் பண்டிகை ஒட்டி கடந்த ஜன. 13, 14, 15 ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கலை ஒட்டி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் ஒரே நாளில் கடந்த 11ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, வசூலில் தங்களது ஹீரோ படம் தான் முதலிடம் என, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்கள் போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன. வாரிசு திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் ரூ.175 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சத்தமே இல்லாமல் இந்த படங்களை முந்தி பொங்கல் விடுமுறையில் ரூ.1,000 கோடிக்கு மேல் டாஸ்மாக் வசூல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும், சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும் மதுபானங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திங்கட்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் குறிப்பிட்ட 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.850 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் திருவள்ளுவர் தினத்தன்று மது அருந்தக்கூடாது என்ற அரசின் நோக்கம் முற்றிலும் சிதைந்து போய் உள்ளது. அதேபோல் அன்று மாநிலம் முழுவதும் அத்தனை இறைச்சி கடைகளும் முழு அளவில் இயங்கியதையும் கவனிக்க வேண்டும்.

அதைதொடர்ந்து காணும் பொங்கல் அன்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை சூடுபிடித்தது. நகரப் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் கிராம புறங்களில் மது விற்பனை அதிகளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏறக்குறைய காணும் பொங்கல் அன்று ஒரே நாளில் சுமார் ரூ.200 முதல் 300 கோடி ரூபாய் வரை, டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டின் பொங்கல் சீசனில் மட்டும், டாஸ்மாக் விற்பனை ரூ.1,000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சரியாக கணிக்க வேண்டுமானால் 1200 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. இந்த பதிவு வேகமாக வைரலாக காரணம், மது விற்பனை இந்த அளவு அதிகரித்தது குறித்து மக்களின் மனதில் எழுந்துள்ள வேதனை தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!