தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு?
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4 மாவட்டங்களில் மட்டும் 900 மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதால், சில தளர்வுகளை அளிக்க முடிவு செய்த தமிழக அரசு, ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் புதிய தளர்வுகள் அமலுக்கு வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் மது விற்பனை துவங்கவுள்ளது.
அதன் படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இயங்கி வரும் 900 மதுக்கடைகள் செயல்பட உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 385 மதுக்கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு பின்பாக மதுக்கடைகள் மீண்டுமாக திறப்பதால், கூட்டம் அலைமோதும் என்ற கணிப்பில் அவற்றை ஒழுங்குபடுத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டாஸ்மாக் கடைகளில் முகவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மது வகைகள் விலை 10 ரூபாய்க்கு மேலும், பீர் வகைகள் 10 ரூபாய்க்கு மேலும், உயர்தர மது வகைகளுக்கு 30 ரூபாய் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
அந்த கோரிக்கையில், 'கொரோனா காலகட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு டாஸ்மாக் கடை ஊழியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 பேர் பலியாகியுள்ளனர். அதனால் ஊழியரை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பும், இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள், டிரைவர், கிளினீர்கள், குடோன் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu