ஆச்சர்யம்..ஆனால் உண்மைங்க..! டாஸ்மாக் மது விற்பனை சரிவு..!!

ஆச்சர்யம்..ஆனால் உண்மைங்க..! டாஸ்மாக் மது விற்பனை  சரிவு..!!

டாஸ்மாக் கடை (கோப்பு படம்)

ஒவ்வொரு விடுமுறை அறிவிப்புக்கு முதல்நாள் மது விற்பனை களைகட்டும். ஆனால் இந்த காந்தி ஜெயந்திக்கு முதல்நாள் பெரிய விற்பனை இல்லையாம்.

வழக்கமாக டாஸ்மாக் விடுமுறை என்று அறிவிப்பு வந்துவிட்டால் விடுமுறைக்கு முதல்நாள் மது பிரியர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத. அடுத்த நாளுக்கும் சேர்த்து மது வாங்கிக்கொண்டு ஏதோ பெரிய சாதனை படைத்த வீரர்கள் போல நெஞ்சினை நிமிர்த்தி நடைபோடுவார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் அதாவது காந்தி ஜெயந்திக்கு முதல் நாள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இல்லையாம். எப்போதும் காந்தி ஜெயந்திக்கு முதல் நாள் மதுபான விற்பனை அள்ளிக்கொட்டும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பெரிய அளவில் விற்பனை இல்லையாம். மதுவிற்பனை 30 கோடி அளவிற்கு சரிந்துள்ளது என்று கவலையாக கூறுகிறார்களாம்.

தமிழ்நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 5,329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வந்தன. மதுவிலக்கு கொண்டுவருவதாக தேர்தல் உறுதி மொழி அளிக்கப்பட்டிருந்ததால், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் துன்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.

தற்போது தமிழ்நாட்டில் 4829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. முன்னதாக கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாட்டில் தனியார்வசம் இருந்த மதுபான சில்லறை விற்பனையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தன் வசம் எடுத்துக்கொண்டது.

அதைத் தொடர்ந்து மது விற்பனை மூலம் அரசின் வருமானம் அதிகரிக்க ஆரம்பித்தது. 2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி வருவாய் வந்துள்ளது. ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில்,அதாவது 2008-2009ஆம் ஆண்டில் இந்த வருமானம் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியது.

ஆனால் அதற்கு அடுத்து வெறும் நான்கே ஆண்டுகளில் (2012-2013) 20 ஆயிரம் கோடி வருவாயை டாஸ்மாக் நிர்வாகம் ஈட்டியது. அதற்கு அடுத்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2018-19ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடியை கடந்தது.

இதற்கிடையே 2022-2023ஆம் நிதியாண்டில் 40 ஆயிரம் கோடியை கடந்து திகிலை ஊட்டியது. அதுவே 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இது 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசின் நிதித்துறை செயலாளர் கடந்த பட்ஜெட் தாக்கலின் போதே கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக ஒரு நாளில் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை மது விற்பனை நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.250 கோடியைத் தாண்டி மது விற்பனை நடைபெறுவதாகவும் கூறுகிறார்கள். அதேநேரம், காந்தி ஜெயந்தி,வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம் போன்ற நாட்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதற்கு முந்தைய நாட்களில் மதுவிற்பனை சும்மா தூள் பறக்கும்.

அந்த வகையில் நேற்றைய காந்தி ஜெயந்திக்கு முதல்நாள் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அன்றைய தினம் ரூ.200 கோடி அளவுக்கு மட்டுமே மது விற்பனையாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் 1-ம் தேதியில் ரூ.230 கோடிக்கு மது விற்பனையானதாக கூறுகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போதும் ரூ.30 கோடி அளவுக்கு விற்பனை குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்து வந்த வேளையில் இந்தாண்டு முதன்முறையாக மது விற்பனை குறைந்துள்ளது. மது விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே கூறி வருகிறார்கள்.

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை குறைவுக்கு போலீசாரின் தீவிரமான வாகன சோதனையும் முக்கிய காரணம் என்கிறார்கள். இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வது என்பது சென்னை, மதுரை , கோவை மற்றும் திருச்சி உள்பட பல நகரங்களில் போலீசார் கடுமையான சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் மதுவிற்பனை சருந்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதேபோல் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்வது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் மதுவிற்பனை குறைய காரணம் என்கிறார்கள்.. அதே போல் மதுவில் இருந்து இப்போது சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மாறிவிட்டதும் மதுபான விற்பனை சரிவுக்கு காரணம் என்கிறார்கள்.

ஒருவேளை பல குடிமகன்களின் வீடுகளில் போட்ட கடிவாளத்தால் இந்த சரிவு இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. இப்போதெல்லாம் குடிக்கும் அப்பாக்களை நிறுத்துவதில் அவர்களின் மகள்கள் பெரும் பொறுப்பு எடுத்துள்ளனர். அவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் விழிப்புணர்வு மற்றும் தந்தை சமுதாயத்தில் மரியாதை உள்ளவராக இருக்கவேண்டும் என்கிற மகள்களின் எதிர்பார்ப்பு போன்றவை பல மதுப்பிரியர்களை மாற்று உள்ளது எனலாம்.

Tags

Next Story