38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது: முதல்வர் வழங்கல்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கி சிறப்பித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் அவர் வழங்கினார்.
புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் அவர்களிடம் முதல்வர் வழங்கினார்.
வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது. வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை
செ. திவான் விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது.
மறைந்த தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் அவர்களின் நூல்களுக்கு 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, முனைவர் ந. இராசையா அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக அவர்களின் மரபுரிமையரிடம் முதல்வர் வழங்கினார். தமிழகம் முழுவதும் உள்ள 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுடன், விருதுத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் சிறப்பித்தார்.
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் 10 பேருக்கு வழங்கப்பட்டது. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுடன் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu