சித்திரையில் பிறப்பவருக்கு கல்வி அறிவு பெருகும்

சித்திரையில் பிறப்பவருக்கு  கல்வி அறிவு பெருகும்
X

சித்திரைக்கனி (ஃபைல் படம்) 

நாளை தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. சித்திரையில் பிறப்பவர்கள் கல்வி அறிவுடைவர்களாக இருப்பார்களாம்.

இன்ஷாநியூஸ் வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும். சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும்.

சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும். சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம்.


சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்குவார்கள். இதற்கு 'கை நீட்டம்' என்று பெயர். மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும்.


மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும். சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.

சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே, அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது. சித்திரை திருவிழா மதுரை தவிர திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும், இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.


சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சித்திரை குப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும். சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.

சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது.

எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Tags

Next Story