தேனி டாக்டருக்கு தமிழக அரசின் விருது

தேனி டாக்டருக்கு தமிழக அரசின் விருது
X

தமிழக அரசின் மஞ்சப்பை விருது பெற்ற தேனி நலம் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார்.

தேனி நலம் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமா ருக்கு தமிழக அரசின் மஞ்சப்பை விருது வழங்கப்பட்டது

தேனி நலம் மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் எம்.டி., (சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்) மிகச்சிறந்த வன ஆர்வலர். வனக்காதலர் என்ற புனைப்பெயரும் உண்டு. இது சாதாரணமாக கிடைத்த பெயர் இல்லை. இயற்கை மீதும், வன விலங்குகள் மீதும் அளவற்ற பற்று கொண்டவர். வனவிலங்குகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசு கவனித்து வருகிறது.

தனது டாக்டர் நண்பர்களையும், சமூக ஆர்வலர்களையும் இணைத்து ஒரு குழு அமைத்து, கண்மாய்களை சுத்தம் செய்து, அவற்றில் உள்ள நெகிழிகளை முழுமையாக அகற்றினார். தனது சொந்த முயற்சியில் வெள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் கிடந்த அத்தனை நெகிழிகளையும் அகற்றினார். குறிப்பாக குரங்குகள், வன விலங்குகள் நெகிழிகளை சாப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக தனது சொந்த முயற்சியில் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து, வனவிலங்குகளை நெகிழிகளில் இருந்து பாதுகாத்தார்.

இவரது முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு டாக்டர் ராஜ்குமாரை கவுரவ வனப்பாதுகாவலராக நியமித்தது. கடந்த பல ஆண்டுகளாக இவர் இந்த பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது தேனி மாவட்டத்தில் அரிக்கொம்பன் யானையை பாதுகாத்து, மயக்க ஊசி செலுத்தி பிடித்து திருநெல்வேலி மாவட்டம், அப்பர் கோதையாறில் இருந்து 13 கி.மீ., துாரம் உள்ள முத்துக்குளி வனப்பகுதியில் விட்டதில் இவருடைய பங்கும் உள்ளது.

தனது மருத்துவமனையில் பயோகழிவுகளை அகற்றுவதில் முன்மாதிரி திட்டங்களை கொண்டு வந்தார். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இவரது மருத்துவமனை பார்மஸியில், பேப்பர் பைகளில் தான் மருந்துகள் வழங்கப்படுகிறது. மாத்திரை சாப்பிட்ட பின்னர் உருவாகும் ஸ்டிரிப்கள், பயன்படுத்திய இன்சுலின் சிரஞ்சுகளை இவர் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றி வருகின்றார்.

இதற்காக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, மாத்திரை கழிவுகள், இன்சுலின் பாட்டில்கள், சிரஞ்சுகளை கொண்டு வரும் நோயாளிகளுக்கு பல ஊக்கப்பரிசுகளை வழங்கி வருகிறார். உலகில் பெரும்பாலான வனப்பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசனை குழுவிலும் இடம் பிடித்துள்ளார்.

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற டாக்டர் ராஜ்குமார், தமிழக அரசின் மஞ்சப்பை விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்று, தனது செயல்பாடுகளையும், அடுத்து செய்ய உள்ள திட்டங்களையும் சமர்ப்பித்தார். இதில் தமிழக அளவில் முதலிடம் பெற்றார். இவருக்கு சென்னையில் நடந்த மஞ்சப்பை விருது வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், முதல் பரிசுக்கான விருதினையும், முதல் பரிசாக ரூ.10 லட்சம் ரூபாயும் வழங்கினார்.

Tags

Next Story