புதுடெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
புதுடெல்லியில் இன்று குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல சரியாக 8: 20 மணிக்கு 6ம் நம்பர் நுழைவு வாயில் பகுதிக்கு வந்தார்.
அப்போது ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகச் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் டெல்லி செல்ல முடியாமல் பயணத்தை ரத்து செய்துவிட்டு மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். இந்த நிலையில் வேறு விமானத்தில் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். குடியரசுத் தலைவரை இன்று காலை 11.30 மணியளவில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரசு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் கருணாநிதி நினைவாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காகவும் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது, ‘கருணாநிதி எ லைப்’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
புதுடெல்லி விமான நிலையத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு. டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எஸ். ஜெகத்ரட்சகன், கே. ஆர். என். ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, டி. எம். கதிர் ஆனந்த், சா. ஞானதிரவியம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
முன்னதக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என 3.06.2021 அன்று அறிவித்திருந்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
முதல்வரின் அழைப்பினை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu