நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல்- எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல்- எடப்பாடி பழனிசாமி
X

நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. 51ம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு துவக்கவிழா பொதுக் கூட்டத்தில், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 2024ம் ஆண்டுநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரலாம் என்று அப்போது கூறினார்.

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 50ம் ஆண்டு பொன்விழா நிறைவு விழா மற்றும் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், நாமக்கல் அருகில் உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தங்கமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. கட்சி எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காப்பாற்றப்பட்டு, 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என தற்போதைய முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்தார் அது முடியவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்துள்ளது. அதனால் வெறுப்படைந்துள்ள பொதுமக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர். அதற்கு இன்று நாமக்கல்லில் நடைபெறும் அ.தி.மு.க. ஆண்டு விழாவில் கலந்துகொண்டுள்ள கூட்டமே சாட்சியாகும். கொட்டும் மழையிலும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு திரண்டுள்ளார்கள். இவர்களின் குடும்ப ஓட்டுகள் சுமார் 5.20 லட்சம் ஆகும். வருகிற 2024 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இன்றைய தினமே 5.20 லட்சம் ஓட்டுகள் கிடைப்பதும், அவர் வெற்றி பெறப்போவதும் உறுதியாகி விட்டது.

வருகின்ற 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதை நான் கூறவில்லை. முன்னாள் தேர்தல் கமிஷனர் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின்கீழ் இதை கூறியுள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் 10 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களை தற்போது அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர். 10- ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள், 75 கலை அறிவியில் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளைக் கொண்டுவந்தோம். மேலும் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வந்தோம். இதனால் தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2030 ம் ஆண்டு அடையக்கூடிய உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை 2021 ல் அடைந்து, இந்தியாவில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு டூ வீலர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம், முதியோர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. இதனால் பொதுமக்கள் தி.மு.க.வின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதற்காக வருகின்ற தேர்தலில் தக்க பாடம் கற்பிப்பார்கள்.

அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், அக்கட்சியை பிளக்க வேண்டும் என்ற எண்ணத்ததில், தி.மு.க.வினர் அ.தி.மு.க.வில் பி டீம் உருவாக்கி உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரது வேண்டுகோளை ஏற்று மன்னிப்பு வழங்கி அவருக்கு துணை முதல்வர் பதிவியும், ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கினோம். அவர் தற்போது திமுகவின் பி டீம் ஆக செயல்படுகிறார். மீண்டும் அ.தி.மு.க.வுடன் இணைவோம் என்று பேசி வருகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவரையும், அவரை சார்ந்தவர்களையும் இனி எந்தக்காலத்திலும் அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம்.

அ.தி.மு.க. ஆட்சியியில் பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக, தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தற்போது மினி கிளினிக்குகளை மூடி விட்டார். அ.தி.மு.க. ஆட்சியின்போது கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, லட்சக்கணக்கான நோயாளிகளைக் காப்பாற்றினோம். இதை இந்தியப் பிரதமர் மோடி பாராட்டினர். மேலும், 5 மாதம் ரேசன் கடைகளில் அனைத்து உணவுப் பொருட்களையும் இலவசமாக வழங்கினோம். இவ்வாறு எண்ணற்ற திட்டங்கள் அ.தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்டன. தற்போதைய தி.மு.க. அரசு அந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கம்பீரமாக பேசினார். தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். சமீபத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்காரர்கள் குறித்து அச்சம் எற்படுவதாகவும், தூக்கம் வராமல் தவிப்பதாவுகம் பேசினார். அவர் திறமையற்ற முதல்வராகவும், செயல்திறன் அற்ற கட்சித்தலைவராகவும் செயல்பட்டு வருகிறர். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்டுப்பாடு மிக்கள் கட்சியாக உள்ளது. இந்த கட்சியை உடைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விரும்புகிறார். அது நடக்காது. அவர்கள் கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது, விரைவில் அந்தக்கட்சி சின்னாபின்னமாக உடைய வாய்ப்பு உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 90 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்கிறார். ஆனால் முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், மின் கட்டணம் குறைப்பு, டீசல் விலை குறைப்பு, முதியோர் உதவித்தொகை உயர்வு, 100 நாட்கள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு,விசைத்தறி, கைத்தறிகளுக்கு கூடுதல் இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த பொதுமக்கள் வெறுப்படைந்து வருகிற தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராக உள்ளனர். தமிழ், ஆங்கிலம் இரு மொழி கொள்கையில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கின்றது. இந்தி மொழிக்கு எதிரான மொழிப்போராட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் தான் ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு தி.மு.க. ஏமாற்றுகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், வளர்மதி, பூனாட்சி, செம்மலை, டக்டர் சரோஜா, திண்டுக்கல் சீனிவாசன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன், மேட்டூர் எம்.பி. சந்திரசேகரன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
50 வயசுக்கு மேல இருக்கவங்களா நீங்க..?உடனே இந்த தடுப்பூசிய போடுங்க..லேட் பண்ணிடாதீங்க !