தமிழ்நாட்டில் இருந்து இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகள்..! தெரிஞ்சுக்கங்க..!

தமிழ்நாட்டில் இருந்து இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகள்..! தெரிஞ்சுக்கங்க..!
X

tamil freedom fighters-தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்.(கோப்பு படம்)

Freedom Fighters of India in Tamil-இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Freedom Fighters of India in Tamil-இன்று மக்கள் தங்களுக்கான அரசை தாங்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி நடந்துவருகிறது. ஆனால், இப்படி வாக்களித்து தங்கள் அரசை தேர்வு செய்துகொள்ளும் முறை வருவதற்கு முன்னர் இந்திய தேசம் எப்படி இருந்தது? வெள்ளையர்களின் பிடியில் சிக்கிக்கிடந்தது.

மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அப்படிக்கிடந்த இந்த நாட்டிற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பது இக்கால இளைஞர்கள் அறியாத ஒன்று. வரலாற்றில் நாம் படித்தாலும் கூட அவர்கள் வெள்ளையர்களிடம் பட்ட இன்னல்கள் வார்த்தைகளில் வடித்துவிட முடியாத துன்பங்கள்.

அன்று இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தின் விளைவாலே நாம் இன்று மகிழ்ச்சியோடு சுதந்திரமாக வாழ்கிறோம். அப்படி இந்திய சுதந்திரத்திற்காக நாடுமுழுவதும் பல தியாகிகள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். அந்த சுதந்திரத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து வெள்ளையர்களை எதிர்த்து போராடிய தியாகிகளை இன்று நாம் பார்க்கப்போகிறோம். யார் யார் தமிழ்நாட்டில் இருந்து போராடிய வீரர்கள் என்பதை பார்ப்போம் வாங்க.

நமது இந்தியாவில், விடுதலைக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். நூற்றுக்கணக்கான தலைவர்கள் அவர்களை வழிநடத்திச் சென்றனர். ஆயினும் கூட தேசிய அளவில் வட இந்திய போராளிகளுக்கு கிடைத்த பெயர், தென்னிந்திய போராளிகளுக்கு கிடைக்கவில்லை என்பது தான் இன்றளவும் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.

உதாரணமாக ராணி லட்சுமி பாய் அம்மையாருக்கு முன்பே, தமிழகத்தில் வீர மங்கை வேலு நாச்சியார், ஓர் பெண்மணியாக ஆங்கிலேயரை எதிர்த்து போராடினர். ஆனால், அவரது பெயர் இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை.

தனது சொத்துகளை விற்று வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த வ.உ.சி, தனது வீர வரிகளால் ஆங்கிலேயனை கிழித்தெறிந்த பாரதி, தீரன் சின்னமலை என தமிழ்நாட்டில் இந்த பட்டியல் நீள்கிறது. அவர்களை இப்போது வரிசையாக பார்ப்போம்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

தனது பாடல்களாலும், எழுத்துகளாலும் சுதந்திரத் தீயை தமிழர்களின் மனதில் மூட்டியவர். தமிழ் மீதும், தமிழ் மண்ணின் மீதும் தீராத பற்றுக் கொண்டிருந்தவர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக இவர் எழுதிய பாடல்கள் இருந்ததால், இவரது பாடல்கள், புத்தகங்கள், ஆங்கில ஆட்சியில் தடை செய்யப்பட்டன. மேலும் ஆங்கில ஆச்சிக்கு கீழ்பணிந்து வந்த பர்மாவிலும் தடை செய்யப்பட்டது.

திருப்பூர் குமரன்

கொடி காத்த குமரன் என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார். ஒரு முறை இந்திய விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேய போலீசாரின் தாக்குதலையும் தாங்கிக்கொண்டு, நமது இந்திய தேசிய கொடியை கீழே விழாமல் தூக்கிபிடித்திருந்தமையால் இவருக்கு இந்த பெயர் வந்தது. அந்த சம்பவத்தின் போது, அவரது உயிர் பிரிந்தும் கூட, மூவர்ண கொடியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்திருந்தது அவரது கைகள். அவர் இந்திய தேசத்தின் மீது வைத்திருந்த பற்று எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

வீர மங்கை வேலு நாச்சியார்

இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியில் இருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி ஆவார். பல மொழிகள் கற்ற வீராங்கனை. ஆங்கிலேயர்களிடம் ஆங்கிலத்திலேயே பேசி அவர்களை விரட்டி அடித்தவர்.

வாஞ்சிநாதன்

திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வீரன். இன்னொருவன் தன்னை சுட்டு சாவதைவிட நாமே சாவோம் என்று தன்னையும் சுட்டுக்கொண்டு மரணம் அடைந்தவர். இவர் தமிழகத்தின் பகத்சிங் என அழைக்கப்பட்டவராவார். ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர் இவர்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். ஆங்கிலேயர்கள் கப்பம் கட்ட கூறிய போது அதை மறுத்தவர் இவர். ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை.

வ.உ. சிதம்பரம்பிள்ளை

ஆங்கிலேயர் ஆட்சியை கடுமையாக எதிர்த்தது மட்டுமில்லாமல். அவர்களை எதிர்த்து வணிகமும் செய்து, கப்பலோட்டிய வீரத் தமிழர். இவரை தடுக்க,சிறையிலிட்டு செக்கு இழுக்க வைத்து கொடுமைகள் செய்தனர் ஆங்கிலேயர். இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.

தீரன் சின்னமலை

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சில வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கேரளா பகுதியிலும், கொங்கு நாட்டின் (கோவையை சுற்றியுள்ள) சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் ஒன்று சேராதவாறு, இடையில் இருந்து வெள்ளையர்களுக்கு குடைச்சல் கொடுத்து பெரும் தடையாகச் சின்னமலை விளங்கி வந்தார். இதனால் ஆங்கிலேயர் தீரன் சின்னமலை மீது பகைக் கொண்டனர்.

சுப்பிரமணிய சிவா

அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர் சுப்பிரமணிய சிவா. தமிழகத்தில் ஏராளமான மக்களுக்கு விடுதலை வேட்கை ஏற்படச் செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். மேலும் இவர் ஒரு சிறந்த இதழாளர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும், மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர்.

மருது பாண்டியர் -பெரிய மருது, சின்ன மருது

மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

புலித்தேவன்

இந்திய விடுதலை வரலாற்றில் "வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர் புலித்தேவன். மேலும் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் இருந்தவர், இவர் தான் என கருதப்படுகிறார்.

அழகு முத்துக்கோன்

ஜெகவீர ராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு தளபதியாக இருந்தவர். கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 5 படைத்தளபதிகளும் மற்றும் 247 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர்.

பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் கூட, தன்னைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய அஞ்சா நெஞ்சு மிக்கவராக அழகு முத்துக்கோன் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயர் தெரியாத பலர் இந்த நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் சிந்திய இரத்தத் துளிகளில் கிடைத்ததே இந்த சுதந்திரம். அவர்களை போற்றுவது நமது கடமை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story