முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சுரேஷ்கோபி ஆலோசனை

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சுரேஷ்கோபி ஆலோசனை
X

மத்திய அமைச்சர் சுரேஷ்கோபியுடன், இஸ்ரோ சேர்மன் சோம்நாத்.

முல்லைப் பெரியாறு அணை வெள்ள அபாயம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:

முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு வெள்ளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விண்வெளி தொழில்நுட்பத்தின் உள்ளீடுகள் மூலம் தடுப்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மத்திய இணையமைச்சர் சுரேஷ்கோபி ஆலோசனை நடத்தினார் என்கிற செய்தி அத்தனை உவப்பான செய்தியாக இல்லை.

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பாஜக சார்பில் வெற்றி பெற்ற, சுரேஷ் கோபி, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் சொன்ன முதல் வார்த்தை, தமிழகத்திற்கும்- கேரளத்திற்குமிடையே பாலமாக இருப்பேன் என்பதாகும். ஆனால் தான் ஒரு மத்திய அமைச்சர் என்பதையும் மீறி, மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், கர்நாடகவைச் சேர்ந்தவருமான சோமண்ணா காவிரி மேகதாது விவகாரம் குறித்து கருத்து சொல்வதைப் போல, சுரேஷ்கோபி கூறியிருப்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரியது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் புதன்கிழமை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத்தை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி சந்தித்தார். அப்போது, மோசமான வானிலையின் போது கேரளத்தில் உள்ள முல்லைப்பெரியாறு, இடுக்கி போன்ற அணைகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கு விண்வெளி தொழில்நுட்பத்தின் உள்ளீடுகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

வெள்ளத்தை தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உயர் துல்லிய நிலப்பரப்புத் தரவுகள் உள்ளிட்ட உள்ளீடுகளை அளிக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த தரவுகளை வழங்குவதாகவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் உறுதி அளித்துள்ளார்.

அதேபோல, அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணின் பரப்பு, அவற்றை உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும் விஞ்ஞானிகளை சுரேஷ்கோபி கேட்டுக் கொண்டதாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மத்திய அமைச்சராக சுரேஷ் கோபி எங்கு செல்லவும் உரிமை இருக்கிறது. ஆனால் வெள்ள அபாயம் எதுவுமின்றி 129 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் வெள்ள அபாயம் ஏற்பட்டால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளை செய்வது என்பது குறித்து இஸ்ரோ தலைவரிடம் நடத்திய ஆலோசனை தேவையற்றது.

கூடுதலாக சுரேஷ் கோபி ஆலோசனை நடத்திய இஸ்ரோ தலைவர் சோமநாத், ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா அருகே உள்ள துறவூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த மலையாளச் சகோதரர் ஆவார். இதுதான் நமக்கு உதைக்கிறது.

இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் முன்பு இருந்தார். அவரை ஒரு விஷயமாக நான் சந்திக்க சென்ற போது தமிழில் என்னுடைய உரையாடலை துவங்கினேன். உடனே அதை மறுத்த அவர், ஒன்று இந்த மாநிலத்தின் தாய் மொழியான மலையாளத்தில் பேசுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள், இல்லையென்றால் தேசிய மொழியான இந்தியில் பேசுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இந்த உணர்வு இஸ்ரோ தலைவரை சந்தித்தபோது சுரேஷ் கோபிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

அதைவிட கொடுமையான நிகழ்வு ஒன்றையும் நாங்கள் காண நேர்ந்தது. கூடுதலாக அந்த சந்திப்பின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, மறு வாழ்வளிப்பது குறித்து திட்டமிடுவதற்கு விண்வெளி தகவல்தொடர்பு திறனுடன் கூடிய மாதிரியை உருவாக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடிய கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது என்கிற செய்திகள் கேரளாவில் முல்லைப் பெரியாறு எப்போதாவது ஓடும், ஏழு மாவட்டங்களில் மறுபடியும் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு மத்திய அமைச்சராக நாட்டுக்கே பணி செய்யும் நிலையில் இருக்கும் ஒருவர், இரண்டு மாநிலங்களுக்கு இடையே 40 ஆண்டுகளுக்கு மேலாக சிக்கல் நீடித்து வரும் ஒரு அணையை குறித்து, நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் கேரளாவை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் விவாதித்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று அல்ல.

உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை குறித்து வழங்கி இருக்கும் நிலையில், ஒரு அமைச்சரின் இஸ்ரோ தலைவருடனான சந்திப்பு ஏற்கத்தக்க ஒன்று அல்ல.

கேரளாவில் பாஜக இப்போதுதான் தன்னுடைய கணக்கை துவக்கி இருக்கும் நிலையில் அமைச்சர் சுரேஷ்கோபியின் நடவடிக்கையை நிராகரிக்கிறோம். ஒருபோதும் முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படப் போவதுமில்லை, அது உடையப்போவதுமில்லை.

விண்வெளி ஆய்வுகளை வெற்றிகரமாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் இஸ்ரோ, அணை குறித்த விவகாரங்களில் தரவுகளை தருகிறோம் என்று தலையிட்டால், அதனுடைய விண்வெளி சாகச பயணத்தில் தடைகளை ஏற்படக்கூடும் என்று கவலையுறுகிறோம். என்று தெரிவித்துள்ளார்

Tags

Next Story