கவர்னர் தேநீருக்கு 'நோ' நரிக்குறவர் வீட்டு விருந்துக்கு ஸ்டாலின் 'எஸ்'

நரிக்குறவர் இன மாணவிகள் அளித்த விருந்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்தில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு நிறைவேற்றி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை ஆவடியில் இன்று 223 வீட்டுமனை பட்டா முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றை முக ஸ்டாலின் வழங்கினார்.
ஆவடி திருமுல்லைவாயல் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளைக் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி தமிழக முதல்வர் சந்தித்திருந்த நிலையில், 18 ஆம் தேதி அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் முதல்வர் உரையாடியிருந்தார்.
வீடியோ காலில் முதல்வரிடம் பேசிய மாணவி, ''நாங்கள் அங்கு வந்து பார்த்த சந்தோஷத்தைவிட நீங்க எங்க வீட்டாண்ட வந்து எங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவோம். எல்லோர்கிட்டையும் சொல்லுவோம் அங்கிள்'' என்றார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ''இன்னும் ஒரு வாரத்துல வர்றேன்... அசெம்பிளி இருக்கு நாளைக்கு... பட்ஜெட்டெலாம் இருக்கு முடிச்சுட்டு வர்றேன்'' என்றார். அப்பொழுது 'நான் அங்கே வந்தால் சாப்பாடு போடுவீங்களா' என முதல்வர் கேட்க, 'கறி சோறே போடுவோம்' என்றனர்.
இந்நிலையில் ஆவடியில் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் கொடுத்த வாக்குறுதியின்படி நரிக்குறவர் பகுதி மாணவிகளைச் சந்தித்தார். அப்பொழுது நரிக்குறவர் மாணவிகள் பாசி மணிகளை முதல்வருக்கு அணிவித்தனர். அதன்பிறகு மாணவி திவ்யா என்பவரின் வீட்டுக்குச் சென்ற முதல்வருக்கு முதலாவதாக தேநீர் வழங்கினார். அதன் பிறகு நாட்டுக்கோழி கறி குழம்பு சமைத்து வைத்திருப்பதாகவும் அதை முதல்வர் சாப்பிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது வீட்டில் நாட்டுக் கோழி கறி குழம்புடன் இட்லி சாப்பிட்டார். அப்பொழுது மாணவிகளின் தாயார் ''நாங்கள் பார்ப்பது கனவா நனவா'' என்றே தெரியவில்லை என மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றார்.
அப்பொழுது, 'எப்போதும் காரமாகத்தான் சாப்பிடுவீர்களா?' என முதல்வர் கேட்க, காரமாக சாப்பிட்டால் தான் சளி எதுவுமே வராது, கொரோனா கூட வராது என விளக்கம் அளித்தனர். அப்பொழுது 'கறி நல்லா இருக்கு' என்றார் முதல்வர். அதன் பிறகு அவரது வீட்டிலேயே கை கழுவிக் கொண்டார். அதன்பிறகு அங்கிருந்த மாணவிகளுடன் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அவர்கள் கொடுத்த பரிசுகளையும் வாங்கிக் கொண்டார்.
நேற்று ஆளுநரின் தேநீர் விருந்தை 'நோ' கூறி தமிழக அரசு புறக்கணித்திருந்த நிலையில் இன்று நரிக்குறவர் இன மக்கள் வீட்டில் 'எஸ்' கூறி டீ, நாட்டுக்கோழி கறியுடன் இட்லி உணவருந்திய முதல்வரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவருடன் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசுவாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu