ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்,பெள்ளிக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கிய ஸ்டாலின்

ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்,பெள்ளிக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கிய ஸ்டாலின்
X

பொம்மன் பெள்ளிக்கு சான்றிதழ் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியர்களை பாராட்டி தலா ஒரு இலட்சம் ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்படமாக ஆஸ்கர் விருதை வென்றது. இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி பற்றிய உண்மை கதையாகும், இந்த ஆவணப்படத்தை வன புகைப்பட கலைஞர் கார்த்திகி எடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் இடம்பெற்றிருந்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ·The Elephant Whisperers' ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில் யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும். முதலமைச்சர் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்" ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story