கணக்கு கேட்ட எம் ஜி ஆர்; பிளவுக்கு அச்சாரம் போட்ட பேச்சு!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
‘‘எம்.ஜி.ஆர். அமைச்சராக விரும்பினார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டால், அமைச்சராகலாம் என்று நான் சொன்னேன். அதனால் எம்.ஜி.ஆருக்கு என் மீது வருத்தம் ஏற்பட்டது" என்று பின்னர் கருணாநிதி தெரிவித்தார். அதன் பின்னணி எப்படி இருப்பினும், இந்த கருத்து வேற்றுமை, தி.மு.கழகத்தைப் பிளவுபடுத்தும் அளவுக்கு வளர்ந்தது. இதையடுத்து 1972 அக்டோபர் 8 ந்தேதி திருக்கழுக்குன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலும் நடை பெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது, தி.மு.கழகத்தில் ஏற்பட்டிருந்த பிளவு பகிரங்கமாக வெடித்தது. (தகவல் உதவி : கட்டிங் கண்ணையா)
எம்.ஜி.ஆர். பேசுகையில் கூறியதாவது,
"எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர். என்று சொன்னேன். உடனே ஒருவர், "நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?" என்று கேட்டார். நான் சொல்கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. முன்பொரு முறை காமராஜரை "என் தலைவர்" என்றும், அண்ணாவை "வழிகாட்டி" என்றும் சொன்னேன். தலைவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர் தான் இருக்க முடியும். அண்ணா தான் தி.மு.க. வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்தி தான் வழிகாட்டி. கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில், "தி.மு.க.வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று சொன்னேனே. அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
மந்திரிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?
ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக்காட்டு. மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்கள் மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்."என்று எம்.ஜி.ஆர். பேசினார். இதுதான் அ தி மு க வுக்கு அச்சாரம் போட்ட ஸ்பீச்!!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu