கேரளாவில் தொடங்கியது சாரல் மழை... தமிழக அணைகளுக்கு நீர் வருமா ?

கேரளாவில்  தொடங்கியது சாரல் மழை...   தமிழக அணைகளுக்கு நீர் வருமா ?
X

கேரளாவில் பெய்யும் பலத்த மழை. (பைல் படம்)

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் நேற்று இரவு முதல் சாரல் மழை தொடங்கி யுள்ளது.

கேரளாவையும் வறுத்தெடுத்து வந்த அக்னி வெயில் கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விட்டது. நேற்று மாலை முதல் கேரளாவின் பல இடங்களில் பருவநிலை முழுமையாக மாறியது.

மேகமூட்டங்களின் அடர்த்தி அதிகரித்தது. ஈரப்பதம் நிறைந்த காற்றுடன் கூடிய சாரல் பெய்யத்தொடங்கியது. அரபிக்கடலில் உருவான ‘‘பைபோய்ஜாய்’’ புயல் சின்னம் தீவிர புயலாக வலுப்பெற்றதன் காரணமாக சாரல் தொடங்கினாலும் இன்னும் ஓரிரு நாளில் பலத்த மழை தொடங்கி விடும். அதாவது வரும் ஜூன் 15ம் தேதி பலத்த மழை தொடங்கி விடும் என தெரிகிறது.

வழக்கமான மழைப்பொழிவில் கேரளாவில் 60 சதவீதம் வரை தென்மேற்கு பருவமழை தான் கை கொடுக்கும். வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தான் அதிகம் பெய்யும். கேரளாவில் மழை தொடங்கி உள்ளதால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து ஓரிரு நாளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதய நிலையில் கடந்த 12 நாட்களாக நீர் வரத்து இல்லாத நிலையிலும் அணையில் இருந்து நீர் பாசனத்திற்கு திறக்கப் பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து சுத்தமாக இல்லாத நிலையிலும், அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 117.65 அடியாக குறைந்துள்ளது. நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால், மழை கை கொடுத்தால் மட்டுமே நீர் திறப்பு தொடர்ந்து சாத்தியமாகும். எனவே போதுமான மழை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!