கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தந்தைக்கு பதில் மகன் மருத்துவர்
மருத்துவர் தினகர் மற்றும் அவரது மகன் அஸ்வின் சிகிச்சை அளித்த போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தினகர். பணியாற்றி வருகிறார். இவரை தவிர முதுநிலை உதவி மருத்துவராக 6 பேரும், 6 செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவர் தினகர் பணிக்கு வராமலும், முறையாக விடுப்பு எடுக்காமலும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஜாலியாக ஒகேனக்கலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, மருத்துவம் படித்து விட்டு ஹவுஸ் சர்ஜனாக இருந்து வந்த அவரது மகன் அஸ்வினை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்குமாறு தினகரன் கூறிவிட்டு சென்றுள்ளார். அஸ்வினும் காலை முதல் இரவு வரை காய்ச்சல் முதல் இதய நோயாளிகள் வரை அனைவருக்கும் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு கவுந்தப்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, தலைமை மருத்துவர் பணியில் இல்லாமல் அவரது மகன் அஸ்வின் பணியில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அஸ்வினிடம் கேட்ட போது, மருத்துவர் தினகர் விடுப்பில் இருப்பதாகவும், தான் பவானி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும், தற்போது மாற்றுப் பணிக்காக வந்திருப்பதாகவும் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். இந்த தகவல் நோயாளிகளுக்கு பரவியதையடுத்து தினகர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வந்தார். மேலும், இதுபற்றி புகார் தெரிவித்த முருகேசனை மருத்துவர் தினகரன் மிரட்டியுள்ளார். எனவே, இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu