சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை மாவடத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம்விராமதி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 153 பயனாளிகளுக்குரூ.38.38 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், விராமதி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார். பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் திருப்பத்தூர் வட்டம், விராமதி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 246 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில், தகுதியுடைய 149 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறயதினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசுநில தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் நடைபெற்று அதன்மூலமும் இக்கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மாணாக்கர்கள் சிறந்த கல்வியை பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு அடிப்படையாக தமிழக அரசால் நான் முதல்வன் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பெற்றோர்களை தங்களது பிள்ளைகளை சிறப்பான முறையில் பயிலுவதற்கு ஊக்குவித்து, அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து வெற்றி காண்பதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக, முதல்வரின் முகவரி என்ற இணையதளம் வாயிலாகவோ, இ.சேவை மூலமாகவோ கோரிக்கைகளை பதிவு செய்து, அக்கோரிக்கைகள் தொடர்பாக 30 நாட்களில் தீர்வு காணலாம். குறிப்பாக, தங்களது கிராமத்தினை சுகாதாரமான கிராமமாக வைத்துக் கொள்வது, ஒவ்வொருவரின் கடமையாகும். குப்பைகளை தரம் பிரித்து, பொதுமக்கள் வழங்கிட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, மீண்டும் மஞ்சபை கலாசாரத்தை உருவாக்கிடுவதற்கு, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
மேலும், இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்துறையைச் சார்ந்த அலுவலர்களை முறையாக அணுகி, அதன் மூலம் பயன்பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 19 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1,49,000 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், வட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.20,40,000 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டா, இ.பட்டா, பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டைகள் ஆகியவைகள் பெறுவதற்கான ஆணைகளையும், தனி வட்டாட்சியர் (மனை வாடகைப்பிரிவு) சார்பில் 01 பயனாளிக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 08 பயனாளிகளுக்கு ரூ.9,928 மதிப்பீட்டிலான இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ22,128 மதிப்பீட்டிலான பயிர் விதைகளுக்கான மானியத் தொகைக்கான ஆணைகளையும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.30,000 மதிப்பீட்டிலான ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) திட்டத்தின் கீழ், 05 பயனாளிகளுக்கு ரூ.12,00,000 மதிப்பீட்டிலான வீடு கட்டும் பணிக்கான ஆணைகளையும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ், 12 பயனாளிகளுக்கு வேலை உத்தரவிற்கான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 05 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டிலான சமுதாய முதலீடு நிதி கடனுதவிக்கான ஆணைகளையும் மற்றும் 05 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டிலான கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கடனுதவிக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.86,680 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களும் என மொத்தம் 153 பயனாளிகளுக்கு ரூ.38,37,736 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, துணை இயக்குநர்கள் (தோட்டக்கலைத்துறை) அழகுமலை, மரு.விஜய்சந்திரன் (சுகாதாரம்), தனித்துணை ஆட்சியர்(பொ) (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, தாட்கோ மேலாளர் முத்துச்செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா மற்றும் விராமதி ஊராட்சி மன்றத்தலைவர் ஆராயி, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu