சிவகங்கையில் உலக தாய்ப்பால் வார விழா: ஆட்சியர் பரிசளிப்பு
சிவகங்கை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் தாய்ப்பால் வார விழா நடந்தது
உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு தாய்மார்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உலக தாய்ப்பால் வாரவிழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர், உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில்,ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகள் உருவாகிட வேண்டும் என்பதற்காக உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் இந்தாண்டு உலக தாய்ப்பால் வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தினை ஏற்படுத்திட மிகச்சிறந்த மருந்துகளில் ஒன்று தாய்ப்பாலாகும். பிறந்த குழந்தைகளுக்கு 1 முதல் 2 மணி நேரத்திற்குள்ளாக சீம்பால் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் தொற்றா நோயின் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். குழந்தைக்கு வழங்கப்படும் தாய்ப்பாலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.
தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுவதற்கான நோக்கமானது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், உலகம் முழவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக விளங்குகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் அமைந்துள்ளன.
தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி மேம்பாடு மற்றும் உடல்நலத்திற்காக குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று உலகளவில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு முறையாக கொடுத்தால் குழந்தைகள் குள்ளத்தன்மை, மெலிவுத்தன்மை, எடைக்குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இல்லா ஆரோக்கியமான குழந்தையாக வளர்வார்கள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதனை ஊக்கப்படுத்திடவும் உறுதிப்படுத்திடவும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்து 2 வருட காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வழிமுறைகளை வழங்கியுள்ளது. குறைந்ததது 1 வருடகாலத்திற்காவது தாய்ப்பால் வழங்கிட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு 9 மாதம் காலம் மகப்பேறு விடுப்பினை வழங்கி வருகிறது. பணிச்சுமை, நேரமின்மை போன்ற காரணங்களை கூறி தாய்ப்பால் வழங்குவதனை தவிர்க்கக்கூடாது. எனவே, தவறாமல் மருத்துவத்துறை ஆலோசனைப்படி குழந்தைகளை பாதுகாக்க தாய்ப்பால் அவசியம் என்பதை உணர்ந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
தொடர்ந்து, தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தை பெற்ற 3 தாய்மார்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.எஸ்.ராம்கணேஷ், துணை இயக்குநர் (குடும்பநலத்துறை) மரு.யோகவள்ளி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பரமேஸ்வரி, மருத்துவமனை மருத்துவ ஆலோசகர் பாலமுருகன், மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மரு.குணவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu