சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கல்
X

சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன் 

பயிர்க்கடனுதவி, தென்னை பராமரிப்பு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, மாற்றுத் திறனாளி கடனுதவி வழங்கப்பட்டன

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்ற நிகழ்விவ் 216 மாணாக்கர்களுக்கு ரூ.10,95,840 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளையும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: மாணாக்கர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.

தற்போதைய நவீன காலத்திற்கேற்ப பாடத்திட்டங்களை விரிவு படுத்தப்பட்டுள்ளதால், அறிவுப் போட்டியை ஈடு செய்கின்ற வகையில் மாணாக்கர்கள் அறிவுக்கூர்மையுடன் பயில வேண்டிய சூழ்நிலை உள்ளது. எதிர்கால தலைமுறையினர் ஆக்கபூர்வம் நிறைந்தவர்களாக உருவாக்குவதற்கான திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் , செயல்படுத்தி, கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்தி வருகிறார்.

தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய கல்வியை நல்லமுறையில் கற்று தங்களது வாழ்க்கை வளமானதாக உருவெடுப்பதற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் தற்போது நிறைவான அடிப்படை வசதியினை பெற்றுள்ளீர்கள். உங்களது பெற்றோர்களின் பொருளாதார சுமையையும் குறைத்து, பெற்றோர்களின் நிலையிலிருந்து உங்களுக்கு தேவையான அனைத்தையும் முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள்.

பெற்றோர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவுத் திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, அரசின் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். நீங்கள் பள்ளிக்கல்வி, உயர்கல்வி கற்பதற்கு மட்டுமின்றி பட்ட மேற்படிப்பு பயில்வதற்கும் அரசின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணாக்கர்கள் நல்லமுறையில் பயின்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 38 மாணவர்கள் மற்றும் 58 மாணவிகளுக்கும், கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 25 மாணவர்கள் மற்றும் 18 மாணவிகளுக்கும், முசுண்டபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 37 மாணவர்கள் மற்றும் 44 மாணவியர்களுக்கும் என 3 பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 96 மாணவர்களுக்கு தலா ரூ.5,175வீதம் ரூ.4,96,800 மதிப்பீட்டிலும், மொத்தம் 120 மாணவியர்களுக்கு தலா ரூ.4,992 வீதம் ரூ.5,99,040 மதிப்பீட்டிலும் என மொத்தம் 216 மாணாக்கர்களுக்கு ரூ.10,95,840 மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.

மேலும், இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட 3 அரசுப்பள்ளியில் 2021-2022-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையாக முதல் பரிசுத்தொகை ரூ.5,000இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3,000மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2,000 ஆகியவைகளையும் மற்றும் புரவலர் திட்டத்தின் கீழ் மேற்கண்ட 3 பள்ளிகளின் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், தலா ரூ.10,000 வீதம் பங்களிப்புத் தொகையினையும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

மேலும், சிங்கம்புணரி வட்டம், கட்டுக்குடிப்பட்டி கிராமத்தில், தற்போது செயல்பட்டு வரும் முழுநேர நியாயவிலைக் கடையில் மொத்தம் 980 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில், மின்னமலைப்பட்டி கிராமத்தில் 195 குடும்ப அட்டைகள் உள்ளன. கட்டுக்குடிப்பட்டியிலிருந்து மின்னமலைப்பட்டி 2.5 கி.மீட்டர் தொலைவில் உள்ளதால்,

மின்னமலைப்பட்டி பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், அப்பகுதியைச் சேர்ந்த தனியார் இடத்தில் தற்சமயம் தற்காலிக நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில், மின்னமலைபட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், நிரந்தரக் கட்டிடம் கட்டித்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.

அதனைத்தொடர்ந்து, கல்லங்காளபட்டி ஊராட்சியில் 180 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனுள்ள வகையில், பகுதி நேர நியாய விலைக்கடையினை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திறந்து வைத்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் புதூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 29 நபர்களுக்கு ரூ.10,72,326 மதிப்பீட்டிலும், நாகமங்கலம் கடன் சங்க உறுப்பினர்கள் 17 நபர்களுக்கு ரூ.6,29,500 மதிப்பீட்டிலும், தர்மபட்டி கடன் சங்க உறுப்பினர்கள் 22 நபர்களுக்கு ரூ.8,26,00 மதிப்பீட்டிலும், வலசைப்பட்டி கடன் சங்க உறுப்பினர்கள் 9 நபர்களுக்கு ரூ.2,38,020 மதிப்பீட்டிலும்.

கரிசல்பட்டி கடன் சங்க உறுப்பினர்கள் 8 நபர்களுக்கு ரூ.2,22,179 மதிப்பீட்டிலும் மற்றும் உலகம்பட்டி கடன் சங்க உறுப்பினர்கள் 7 நபர்களுக்கு ரூ.3,92,628 மதிப்பீட்டிலும் என மொத்தம் 92 சங்க உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.33,80,653 மதிப்பீட்டிலான பயிர்க்கடனுதவி, தென்னை பராமரிப்பு கடனுதவி, கால்நடை பராமரிப்பு கடனுதவி, மாற்றுத்திறனாளி கடனுதவி ஆகியவைகளையும் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில், 40 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கோ.சீனு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.சுவாமிநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!