வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் பயிற்சி: அமைச்சர் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வேலைவாய்ப்புத்திறன் பயிற்சியை தொடக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்
பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நேஷனல் அகாடமி பயிற்சி நிறுவனத்தின் மூலம் நகர்ப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி முன்னிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரது வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.
இந்திய அளவில், அடிப்படை கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவைகளில் தமிழகம் சிறந்து விளங்கிட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்கள். பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒன்றிய, மாநில அரசின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் 3 நகராட்சிகள் மற்றும் 12 பேரூராட்சிகளில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பற்ற நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் இருபாலாருக்கும் கட்டணமில்லாமல் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி மற்றும் திறன் மேம்படுத்தல் பயிற்சிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருமானத்துடன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கு 580 வேலைவாய்ப்பற்ற நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சிகளான தையற் கலை வல்லுநர் பயிற்சி, அழகுக்கலைப் பயிற்சி மற்றும் தொலை தொடர்பு சாதன கையாளுநர் பயிற்சி ஆகிய வகையினங்களில் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வழங்கிட. பயிற்சி நிறுவனக் கட்டணம், சீருடை, பயிற்சி உபகரணங்கள், போக்குவரத்து செலவினம் மற்றும் ஊக்கத் தொகை ஆகிய வகையினங்களில் ஒரு இளைஞருக்கு குறைந்தபட்சம் ரூ.2,100 பயிற்சி செலவினமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், வேலைவாய்ப்பிற்கு தேவைப்படும் ஆங்கில பேச்சுப் பயிற்சி, கணினி பயிற்சி மற்றும் ஆளுமை திறன் பயிற்சி ஆகியனவும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
கடந்த 19.07.2022 அன்று சிவகங்கை நகர்ப்பகுதியில் நடத்தப்பட்ட இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஆர்வமுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதற்கென விண்ணப்பித்த நபர்கள் என முதற்கட்டமாக திருப்பத்தூர் நேஷனல் அகாடமி பயிற்சி நிறுவனத்தின் மூலம் இன்றையதினம் 50 மகளிர்களுக்கு தையற்கலை வல்லுநர் பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியுடன் இலவசமாக பயிற்சி சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்களும் வழங்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இளைஞர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைவு பெறும் வகையில், தமிழக அரசால் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தொழில் திறன் பயிற்சியின் வாயிலாக தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டும், சிறந்த வேலைவாய்ப்பினையும் பெற்றும், தங்களது பெற்றோர்களின் கனவை நனவாக்கின்ற வகையில் தங்களது பங்களிப்பை அளித்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் , 50 மகளிர்களுக்கு சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், வழங்கி, அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேரூராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) க.வானதி, திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் த கோகிலாராணி நாராயணன், பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.கான்முகமது, நேஷனல் அகாடமி ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி இயக்குநர் .மு.காசிநாதன், பேரூராட்சி உறுப்பினர் சாந்தி சோமசுந்தரம், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நேஷனல் அகாடமி ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் ஜெ.சுரேஷ் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu