சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கையில் மாவட்ட அளவில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில் இந்தபோட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது;-
1993-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2022-ஆம் ஆண்டு அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, முன்னேற்பாடாக, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
இவ்விளையாட்டுப் போட்டியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், தொழிற் பயிற்சி நிலையங்களில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் என 215 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மேலும், உடலியக்க குறைபாடு உடையவர்கள் காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகிய பிரிவுகளில் 29 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற 14 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் சிறப்புப்பள்ளி தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu