முகாம் வாழ் தமிழர்களின் குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள்

முகாம் வாழ் தமிழர்களின் குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள்
X

கட்டுமான பணியை ஆய்வு செய்யும் அமைச்சர்கள். 

ஒக்கூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில், கட்டப்பட்டு வரும் முகாம் வாழ் தமிழர்களுக்கான குடியிருப்புக்களின் கட்டுமானப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது. அந்தவகையில், நமது அண்டை நாடான இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நலனை காக்கின்ற வகையில், அவர்களின் தாய் தமிழகமாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி பாதுகாத்து வருகிறது.

அதன்படி, அவர்கள் அனைவருக்கும் 100 சதவிகிதம் வீடுகள் கட்டித்தரும் பொருட்டு, தமிழகம் முழுவதும் மொத்தம் கடந்தாண்டு 3,500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. அதேபோன்று, நடப்பாண்டிலும் 3,500 வீடுகள் தமிழ்நாடு முதலமைச்சர், ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கென அரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் ஆய்வு மேற்கொண்டு, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களைச் சார்ந்த 3,242 நபர்கள் உள்ளனர். அதில் ஒக்கூர் ஊராட்சியில் ,மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில், ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகளுக்கு மட்டும் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகளின் கட்டுமானப் பணிகளும், துறை ரீதியாக இப்பகுதியின் இதர அடிப்படை மேம்பாட்டுப் பணிக்களுக்கென ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் என சுமார் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் இடவசதியை பொறுத்து முகாம்களை ஒருங்கிணைத்து, ஒரேப்பகுதியில் நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 முகாம்களை ஒருங்கிணைத்து 420 வீடுகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோன்று, இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தாயுள்ளத்துடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறார்கள் என , சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன், செயற் பொறியாளர் வெண்ணிலா, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (கட்டடம்) விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாச்சலம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு) உமா உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!